அன்வார் இப்ராஹிம் கூறியதாவது, அவரது துர்க்மெனிஸ்தான் பயணம், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற முக்கிய சந்தைகளுக்கு மலேசியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்.
எண்ணெய், எரிவாயு மற்றும் டீசல் விநியோகத்திற்கான நீண்டகால ஒப்பந்தம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மலேசியாவிற்கு உறுதியளித்ததாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்
ரஷ்யா மற்றும் துர்க்மெனிஸ்தானுடன் மேற்கொள்ளப்படும் மூலோபாய ஒத்துழைப்பு, மலேசியாவின் எரிசக்தி வழங்கல் பாதுகாப்பை பல தசாப்தங்களுக்குப் பலப்படுத்தும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
குறைந்தது 20 ஆண்டுகளுக்கு எண்ணெய், எரிவாயு மற்றும் டீசல் விநியோகம் செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மலேசியாவிற்கு உறுதியளித்ததாக அவர் கூறினார்.
நான் கசானுக்குச் சென்றிருந்தபோது, அங்கு நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது ரஷ்ய அதிபர் இந்த விஷயத்தைத் தெரிவித்தார்.
“இது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளையும் நட்பையும் பிரதிபலிக்கிறது,” என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற செட்டியா போன்டைன்ஸ் தொழிற்பூங்காவின் அடிக்கல் நாட்டு விழாவில் கூறினார்.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் மலேசியாவிற்கு புதிய அணுகலை துர்க்மெனிஸ்தான் நாடு அங்கீகரித்ததன் மூலம், தனது சமீபத்திய உத்தியோகப்பூர்வ பயணம் மேலும் பெரும் முன்னேற்றத்தை அளித்துள்ளதாக அன்வார் கூறினார்.
இந்த வளர்ச்சி, நீண்ட காலத்திற்கு நாட்டின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று அவர் கூறினார்.
மலேசியா உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்புகளில் ஒன்றிற்கான அணுகலைப் பெற்றுள்ளது. இதன் பொருள், பல பத்தாண்டுகளுக்கு நமது எரிசக்தி தேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
“அதிக எரிசக்தி தேவைகளைக் கொண்ட கூட்டாளர் நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கவும் இதை நாம் பயன்படுத்தலாம்,” என்று அவர் கூறினார்.
2024 டிசம்பரில் துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்தார் பெர்டிமுஹமெடோவ்( Turkmenistan president Serdar Berdimuhamedov) மலேசியாவிற்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து, மலேசியாவுக்கும் துர்க்மெனிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற நல்லுறவு மற்றும் பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், மக்களுக்கு எரிசக்திப் பாதுகாப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும் சர்வதேச உறவுகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
























