அடுத்த மாதம் பணி ஓய்வுபெறும் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி, 2008 அக்டோபரில் பதவியேற்றது முதல் அம்னோ சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்ததில்லை அவற்றில் தலையிட்டதுமில்லை என்கிறார்.
இன்று சீனமொழி நாளேடான சின் சியு டெய்லியில் வெளிவந்துள்ள சிறப்பு நேர்காணலில் ஸாக்கி, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நாளில் அம்னோ சம்பந்தப்பட்ட வழக்குகளிலிருந்து விலகி இருப்பதாக உறுதியெடுத்துக்கொண்டதாகவும் அதைக் காப்பாற்றி வந்திருப்பதாகவும் கூறினார்.
மேலும், அம்னோ சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளை ஏற்பாடு செய்வதிலும் தாம் தலையிட்டதில்லை என்றாரவர்.
பேராக் மந்திரி புசார் ஸம்ரி அப்துல் காடிரும் அவருக்குமுன் மந்திரி புசாராக இருந்த முகம்மட் நிஜார் ஜமாலுடினும் பேராக் அரசமைப்பு நெருக்கடியில் மோதிக்கொண்டபோது அவ்வழக்கைக் கவனிக்கும் பொறுப்பை முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அலாவுடின் முகம்மட் ஷரிப்பிடம் ஒப்படைத்ததாக ஸாக்கி தெரிவித்தார்.
கூட்டரசு நீதிமன்றத்துக்கு வரும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது தலைமை நீதிபதியின் பொறுப்புகளில் ஒன்று.
நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு முன் அம்னோ வழக்குரைஞராக இருந்தவர் ஸாக்கி. அவர் 2007 செப்டம்பர் 5-இல் நேரடியாகவே நாட்டின் உச்சநீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்டார். 2007, டிசம்பர் 11-இல், முறையீட்டு நீதிமன்றத் தலைவராக அமர்த்தப்பட்ட அவர் 2008 அக்டோபர் 18-இல் தலைமை நீதிபதி ஆனார். அடுத்த மாதம் 66வது வயதில் அவர் பணி ஓய்வு பெறுவார்.
நீதிபதிகள் மெஜிஸ்ட்ரேட்டுகளாக சேவையைத் தொடங்கி செஷன்ஸ் மன்றம், உயர்நீதி மன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், அதன்பின் கூட்டரசு நீதிமன்றம் எனப் படிப்படியாக பணிஉயர்வு பெறுவது வழக்கம்.
இதில், ஸாக்கியும் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராமும் மட்டும் விதிவிலக்கு. வழக்குரைஞராக பணிபுரிந்துகொண்டிருந்த கோபால், நேரடியாக முறையீட்டு நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்டார்.
ஸாக்கி வழக்குரைஞராக இருந்த காலத்தில் நீதிமன்ற அதிகாரிகளுக்கு கையூட்டுக் கொடுத்ததாக சரவாக்கில் ஒரு நிகழ்வில் குறிப்பிட்டார் என்று கூறி அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல வழக்குரைஞரும் டிஏபி தலைவருமான கர்பால் சிங் முன்பு கூறியிருந்தார்.
நேர்காணலில் அது பற்றிக் கேட்டதற்குப் பதிலளிக்க மறுத்த ஸாக்கி, தாம் ஓர் அரசியல்வாதி அல்ல என்றார்.