மத்திய கிழக்கு மோதல் நீடித்தால் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், பிற நாடுகளிலிருந்து எரிசக்தியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் ஆராயத் தொடங்கியுள்ளதாக துணைப் பிரதமர் பதில்லா யூசுப் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலுக்கு மத்தியிலும் மலேசியாவின் எரிசக்தி விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய பெட்ரோனாஸ் தற்செயல் திட்டங்களை வைத்துள்ளதாக பதில்லா கூறினார். இதற்காக ஆஸ்திரேலியா மற்றும் பிற ஆசிய-பசிபிக் நாடுகள் மாற்று விநியோகஸ்தர்களாகக் கருதப்படுகின்றன.
“மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாக எரிவாயு அல்லது எண்ணெய் கொண்டு வர முடியாத சூழல் ஏற்பட்டால், மாற்று விநியோக வழிகளைக் கண்டறிய பெட்ரோனாஸ் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த அனைத்து மாற்றுத் திட்டங்களும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை திட்டமிடல் சிறப்பாக நடைபெற்று வருகிறது; நமது விநியோகமும் சீராக உள்ளது,” என்று எரிசக்தி மாற்றீடு மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான ஃபதில்லா கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் வழக்கமாக நடைபெறும் ஹார்முஸ் நீரிணை , இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானால் மூடப்பட்டது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 100 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில், புத்ராஜெயா நிர்வாகம் தீபகற்ப மலேசியாவில் RON97 விலையை 1.30 ரிங்கிட், மானியம் இல்லாத RON95 விலையை 60 காசுகள் மற்றும் டீசல் விலையை 1.60 ரிங்கிட்டாகஉயர்த்தியுள்ளது.
இருப்பினும், தகுதியுள்ள மலேசியர்களுக்கான RON95 மற்றும் கிழக்கு மலேசியாவிற்கான டீசல் ஆகியவற்றிற்கு அரசாங்கம் தொடர்ந்து மானியம் வழங்கி வருகிறது. இந்த நடவடிக்கையால் கருவூலத்திற்கு (Treasury) மாதந்தோறும் 3.2 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது; இது முன்னதாக இருந்த 700 மில்லியன் ரிங்கிட் என்ற அளவை விட அதிகமாகும்.
இன்று அதிகாலை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், மலேசியா இன்னும் நிகர எண்ணெய் இறக்குமதி நாடாகவே இருப்பதாகவும், நாட்டின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 50% ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருவதாகவும் தெரிவித்தார்.
-fmt
























