பக்காத்தான் மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள்

மூன்றாவது தேசிய பக்காத்தான் ராக்யாட் மாநாடு மிகுந்த உற்சாகத்துடன் நேற்றிரவு முடிவடைந்தது. நேற்றிரவு அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தான் ஹலிம் அரங்கில் நிகழ்ந்த பேரணியில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த அரங்கத்துக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரையில் கார்கள் சாலை ஒரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. என்றாலும் பக்காத்தான் ஆதரவாளர்கள் தங்கள் தலைவர்களுடைய உரைகளைச் செவிமடுக்க அரங்கத்துக்குள் செல்லத் தயங்கவில்லை.

அந்த நிகழ்வின் உச்சக்கட்டமாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆற்றிய 40 நிமிட ஆவேசமான உரை அமைந்திருந்தது.

அவர் அண்மையில்தான் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தாம் விடுதலை செய்யப்பட்ட பின்னர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். இந்தியாவிலும் துருக்கியிலும் தாம் பேசுவதற்கு ஏற்கனவே ஒப்புக் கொண்டதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதும் அன்வார், தமது பிறந்த ஊரான செரோக் டோக் குன் -னுக்குச் செல்வார் என வட மாநிலங்களில் உள்ள அவரது பல ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

அன்வார்: என் குடும்பத்தை இதிலிருந்து விட்டு விடுங்கள்

அந்த விசாரணை தொடர்பில் தம்மையும் தமது குடும்பத்தையும் மிரட்டுவதை நிறுத்துமாறு அன்வார் தமது எதிரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

“எல்லாம் போதும், போதும்” என வலியுறுத்திய அவர் எதிரிகளை மன்னிக்கவும் தயாராக இருப்பதாகவும் சொன்னார்.

“அவர்கள் எனக்கு எல்லாவற்றையும் செய்துள்ளனர். என்னை உதைத்துள்ளனர். நிர்வாணமாக்கியுள்ளனர். ஆனால் நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன்.”

“எங்களை விட்டு விடுங்கள். தயவு செய்து முன்னேறுங்கள்,” என ஆவேசமாகக் குறிப்பிட்ட அன்வார், தாக்குதல்களை தாம் இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்த்தினார்.

அதற்கு முன்னதாக பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் மிகவும் வேகமாகப் பேசியது பத்திரிகையாளர்களையும் பார்வையாளர்களையும் கூட வியப்பில் ஆழ்த்தியது.

அந்த மாநாட்டின் பிற்பகல் நிகழ்வுகளில் 81 வயதான நிக் அஜிஸ் களைப்படைந்தவரைப் போலக் காணப்பட்டார்.

அரசியலிலிருந்து சற்று விலகிச் சென்ற அவர், மலேசியாவின் பல இன வம்சாவளி மக்களுக்கு இடையில் சிறந்த புரிந்துணர்வு மேலோங்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

அந்த வகையில் கிளந்தான் அனுபவத்தைப் பின்பற்றுமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

“கிளந்தானில் உள்ள சீனர்கள் பள்ளிவாசல்களுக்குக் கூட நன்கொடை அளித்து வருகின்றனர்.  அரசாங்கத்திடமிருந்து நிதி உதவு பெறும் போது அவர்கள் எங்கள் போராட்டத்துக்கு சிறிதளவு பணம் கொடுக்கின்றனர்,” என கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அஜிஸ் சொன்னார்.

ஹுடுட் பிரச்னையைத் தீர்க்கவும்

நிக் அஜிஸுக்கு முன்பு டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் பேசினார். அவரது உரையை கூட்டத்தினர் மிக்க அமைதியாக செவிமடுத்தனர். அன்வார் மீது சுமத்தப்பட்ட குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் பிரதிவாதித் தரப்புக் குழுவுக்கு தலைமை தாங்கிய கர்பால் அப்போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்கினார்.

சட்டத்துறைத் தலைவர் அன்வார் விடுதலைக்கு எதிராக முறையீடு செய்யக் கூடும் சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்ட கர்பால், தாமும் தமது வழக்குரைஞர் குழுவும் அதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

எதிர்பார்க்கப்பட்டது போல கர்பால், ஹுடுட் சட்டத்தை அமலாக்க பாஸ் கொண்டுள்ள விருப்பம் பற்றியும் பேசினார். அவர் பேசிய போது பெரும்பாலும் மலாய் முஸ்லிம்களாக இருந்த கூட்டத்தினரிடமிருந்து எந்த விதமான எதிர்மறையான நடவடிக்கைகளும் இல்லை.

“நம்மிடையே இன்னும் பிரச்னைகள் உள்ளன. நாம் அவற்றை விவாதித்து தீர்த்துக் கொள்ள வேண்டும்,” எனக் கூறிய அவர், 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவற்றை தீர்த்துக் கொள்வது அவசியம் என்றார்.