மலேசியாவின் மேலும் 6 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கட்டம் கட்டமாக கடக்க அனுமதி – ஈரான் தூதர் தகவல்

ஈரான் தூதர் வலியுல்லா முகமதி நஸ்ராபாதி அளித்த தகவலின்படி, ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள எஞ்சிய ஆறு மலேசியக் கப்பல்களும் அந்த நீர்வழியை கடக்க படிப்படியாக அனுமதிக்கப்படும்.

“ஈரான் அந்தக் கப்பல்களை ஒவ்வொன்றாக கடந்து செல்ல அனுமதிப்போம்,” என்று இன்று இங்கு நடைபெற்ற ‘கோலாலம்பூர்-அங்காரா உரையாடல் 2026’  நிகழ்வின் ஒரு பகுதியாக பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பிராந்திய பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் சிக்கியிருந்த ஏழு மலேசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்களில் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அது தனது இறுதி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை விஸ்மா புத்ரா (மலேசிய வெளியுறவு அமைச்சகம்) உறுதிப்படுத்தியிருந்தது.

இப்படியொரு சூழலில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோருக்கு இடையே கடந்த மார்ச் 26 அன்று நடைபெற்ற உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்த ஏழு மலேசியக் கப்பல்களும் தங்கள் பயணத்தைத் தொடர அனுமதி கிடைத்துள்ளது.

உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் ஒரு முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை வழிப் போக்குவரத்து, கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடையூறுகள் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வழிவகுத்ததோடு, எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்து பெரும் பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

ஈரான் தமக்கு “பகைமை இல்லாத” நாடுகளின் கப்பல்களை மட்டும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிப்பதோடு, அவற்றின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

 

-fmt