கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், குற்றம் சாட்டப்பட்ட சிறார் பாலியல் குற்றவாளி ஒருவர் நேற்று சுங்கை பூலோ சிறையிலிருந்து எவ்வாறு தப்பினார் என்பது குறித்து அதிகாரிகள் உண்மையை விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
உயர்மட்ட பாதுகாப்பு கொண்ட ஒரு சிறைச்சாலையில், கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஒருவர் தப்பியது மிகவும் பாரதூரமான சம்பவம் என்று டிஏபி தலைவர் தெரிவித்துள்ளார்.
“இவ்வளவு அபாயகரமான நபர் இவ்வளவு எளிதாக தப்பியது எப்படி? அவர் கைவிலங்கிடப்பட்டிருந்தாரா? அதிகாரிகள் கவனிக்காத நேரத்தில் அவர் அப்படியே வெளியே நடந்து சென்றாரா? அவருக்கு யாராவது உதவினார்களா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களுக்குச் சாக்குப்போக்குகள் தேவையில்லை. அவர்களுக்கு உண்மையும் ஆதாரங்களுமே வேண்டும்.
“இந்த விவகாரம் குறித்து முழுமையான விளக்கத்தையும், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும் என நான் கோருகிறேன். மேலும், தங்கள் கடமையில் அலட்சியமாக இருந்த எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வெளிப்படைத்தன்மை என்பது வெறும் விருப்பத் தெரிவு அல்ல. இது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நம்பகத்தன்மை சார்ந்தது,” என்று லிம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய 24 வயதான முகமது ஹசன் என்ற பாகிஸ்தான் நாட்டவரைப் போலீசார் இன்னும் தேடி வருகின்றனர்.
அவர் கடைசியாக ஆரஞ்சு நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருப்பது காணப்பட்டது.
சிறைச்சாலைத் துறை கூறுகையில், ஷா ஆலம் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் முடிந்து, சுங்கை பூலோ சிறை வளாகத்திற்கு மாற்றப்படும்போது அந்த நபர் போலீஸ் காவலில் இருந்து தப்பியோடினார் எனத் தெரிவித்துள்ளது.
முகமது மீது சிறுவர்களுக்கு எதிரான மூன்று உடல் ரீதியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளும், இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவு கொண்டமை, கொள்ளை மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தமை என தலா ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
-fmt
























