தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறுவர் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்க வேண்டும்: ஐநா வலியுறுத்தல்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தடைகள் அல்லது வயதுக் கட்டுப்பாடுகள் மட்டுமே, அந்தத் தளங்களின் தீய விளைவுகளிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கப் போதுமானவை அல்ல என்று ஜெனிவாவில் வெள்ளிக்கிழமை அன்று ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அந்த நிறுவனங்களும் அவற்றின் அல்காரிதம்களும் (வழிமுறைகளும்) கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

“பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மீது சுமையை சுமத்துவதற்குப் பதிலாக, தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தளங்களின் வடிவமைப்பிலேயே பாதுகாப்பை உள்ளடக்க அரசு கட்டாயப்படுத்த வேண்டும்,” என்று மனித உரிமைகளுக்கான ஐநா உயர் ஆணையர் வோல்கர் டர்க் கூறியதாக ஜெர்மன் செய்தி நிறுவனமான dpa மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

“பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஒரு பிரச்சனைக்கு, ஒட்டுமொத்த சமூக ஊடகத் தடைகள் மட்டுமே உடனடித் தீர்வாகாது,” என்று ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அரசாங்கங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான புதிய பரிந்துரைகளை அவரது அலுவலகம் வெளியிட்டபோது டர்க் கூறினார்.

பரிந்துரைகளின்படி, அரசாங்கங்கள் கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்; அதே நேரத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தளங்களின் வடிவமைப்பில் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும். தளங்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும், மேலும் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் அதற்குப் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும்.

முடிவில்லா ஸ்க்ரோலிங், தானியங்கி இயக்கம் மற்றும் தொடர்ச்சியான அறிவிப்புகள் போன்ற “அடிமையாக்கும் வடிவமைப்பு” அம்சங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐநா மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆன்லைன் விளம்பரங்களையும் கடுமையான விதிகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

ஆஸ்திரேலியா கடந்த டிசம்பர் மாதம் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை அறிமுகப்படுத்தியது, மேலும் ஸ்பெயின், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல அரசாங்கங்கள் அதுபோன்ற நடவடிக்கைகளுக்கான திட்டங்களை அன்றிலிருந்து அறிவித்துள்ளன.

மலேசியா வரும் ஜூன் 1 முதல் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வயதுக் கட்டுப்பாடுகள் மற்றும் இதர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும்.

வயது சரிபார்ப்பு அமைப்புகளுக்கும் பாதுகாப்பு விதிமுறைகள் தேவை என்று டர்க் கூறினார். “வயது சரிபார்ப்பு தவறாகச் செய்யப்படும்போது, அது தனது இலக்கில் தோல்வியடைவதுடன், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆகிய இருசாராரின் தனியுரிமைக்கும் ஆபத்தை விளைவிக்கும்,” என்று அவர் கூறினார்.

 

 

-fmt