மலேசியாவின் எரிபொருள் விநியோகம் குறித்து புதினுடன் அன்வார் பேச்சுவார்த்தை

நாளை முதல் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் தனது பயணத்தின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக நாட்டின் எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவது இருக்கும்.

ஆசியான் தலைவர்களுக்கும் ரஷ்யத் தலைமைத்துவத்திற்கும் இடையிலான சந்திப்பை உள்ளடக்கிய இந்த விஜயம், மலேசியாவிற்கான எண்ணெய் மற்றும் டீசல் விநியோகத்தின் தொடர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகும் என்று அன்வார் கூறினார்.

புதினைச் சந்திக்கும் போது நான் வலியுறுத்த உத்தேசித்துள்ள விஷயங்களில் ஒன்று, நமக்கு எண்ணெய் விநியோகம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதாகும். மற்றவர்களுடன் நல்லுறவைப் பேணுவதன் நன்மை இதுதான், என்று இன்று ஜொகூர், மூவாரில் அவர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சரியான பொருளாதார மேலாண்மை மற்றும் வலுவான சர்வதேச உறவுகள் காரணமாகவே மலேசியாவால் RON95 பெட்ரோலின் சில்லறை விலையை ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாக​த் தக்கவைக்க முடிந்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ள ஆயுத மோதலுக்கு வரும் நாட்களில் தீர்வு காணப்பட வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சமீபத்தில் தன்னிடம் தெரிவித்ததாக அன்வார் கூறினார்.

“எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, போர் முடிவுக்கு வரக்கூடும் என்று அவர் கூறினார். அந்த முடிவிற்காக நாம் பிரார்த்தனை செய்வோம்; ஏனெனில் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், அதன் தாக்கம் மலேசியாவையும் பாதித்து எண்ணெய் விலைகள் உயரும்.

ஆனால், இன்றைய நிலவரப்படி எண்ணெய் விலைகள் ஏற்கனவே சற்று குறையத் தொடங்கியுள்ளன,” என்று அவர் கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஒரு பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக செய்தி நிறுவனம் இன்று முன்னதாகத் தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தால் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்தன; இருப்பினும் தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த முடிவு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு விடப்பட்டுள்ளது.

இது ஒரு ஆரம்பக்கட்ட கட்டமைப்பு மட்டுமே என்றபோதிலும், கடந்த பிப்ரவரி மாதம் ஈரானின் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலுடன் தொடங்கி, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, எரிசக்தி சந்தையைத் தலைகீழாக மாற்றிய இந்த மோதலைத் தீர்ப்பதற்கான மிகப்பெரிய முன்னேற்றமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.

“ஈரானுடனான ஒப்பந்தம் இப்போது முழுமையடைந்துள்ளது,” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இம்மோதலில் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தானின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், திங்கட்கிழமை அதிகாலையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே டிரம்பின் இந்தப்பதிவு வெளியானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

 

 

-fmt