பிரதமர் அன்வார் இப்ராஹிம், காவல்துறையின் விசாரணை மற்றும் நெகிரி செம்பிலான் அரச நிறுவனத்தில் தாம் தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கவும், அந்த அவதூறான கருத்துக்களை திரும்பப் பெறவும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மானுக்குக் கெடு விதித்துள்ளார்.
தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பியதற்காக துவான் இப்ராஹிம் மீது அன்வார் சிவில் வழக்கு தொடர்வார்.
அன்வாரின் வழக்கறிஞர் எஸ்.என். நாயர் கூற்றுப்படி, ஜூன் 14 அன்று குவாலா கிராவ் பகுதியில் உள்ள ஃபெல்டா ஜெண்டராக் உத்தாரா என்ற இடத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் துவான் இப்ராஹிம் இந்த அவதூறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சின் சில பகுதிகள் அடுத்த நாள் துவான் இப்ராஹிமின் முகநூல் பக்கம் மற்றும் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
அந்த உரையில், அமைச்சர்களை விமர்சிப்பவர்கள் விரைவில் தங்களை காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்க நேரிடலாம் என்று துவான் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.
துவான் இப்ராஹிம் முறைகேடு, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்தும் பேசினார். இது பிரதமர் மற்றும் அவரது நிர்வாகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று அன்வாரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அன்வார், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் எவரையும் விசாரிக்குமாறு தாம் ஒருபோதும் காவல்துறைக்கு உத்தரவிடவில்லை என்றும், நெகிரி செம்பிலான் அரச நிறுவனத்தில் தாம் ஒருபோதும் தலையிடவில்லை.
அதனைத் தொடர்ந்து, துவான் இப்ராஹிம் தனது அறிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும், சமூக ஊடகப் பதிவுகளை அகற்ற வேண்டும், நிபந்தனையற்ற பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் மற்றும் இத்தகைய குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூற மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும் என அன்வார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர் இழப்பீட்டுத் தொகையையும் சட்டச் செலவுகளையும் கோரியுள்ளார்.
அன்வார் ஊழல், முறைகேடு அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்ற கருத்தை ஆதரிப்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் துவான் இப்ராஹிம் சமர்ப்பிக்கவில்லை என்று வழக்கறிஞர் நாயர் தொடர்ந்து கூறினார்.
-fmt
























