எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை, அவரது அரசியல் எதிரிகளும் முக்கிய ஊடகங்களும் தொடர்ந்து அவமானப்படுத்தக் கூடாது என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார்.
“பல ஆண்டுகளாக பத்திரிக்கைகள் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தி வருகின்றன. அது பெரிய பாவமாகும். காரணம் அவை அன்வாருடைய கௌரவத்துக்கு கேடு விளைவிக்கின்றன.”
“அன்வாரும் ஒரு மனிதர்தான். மரக்கட்டை அல்ல. வெட்கம் என்றால் என்ன என்பது அவருக்கும் தெரியும்,” கிளந்தான் மந்திரி புசாருமான அவர் கடந்த வியாழக்கிழமை மலேசியாகினிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.
பிகேஆர் மூத்த தலைவரைக் களங்கப்படுத்த மேற்கொள்ளப்படும் இயக்கத்தை கண்டித்த நிக் அப்துல் அஜிஸ், அன்வாருக்கு மறுமையில் வெகுமதி கிடைக்கும் என்றார். அதே வேளையில் அவருக்கு களங்கத்தை ஏற்படுத்தியவர்கள் பாவத்தை சுமக்க வேண்டும் என்றார்.
“நிலைமை எப்படி தலைகீழாக மாறி விட்டதை என்பதைப் பார்த்தீர்களா? அன்வாரை வெட்கப்பட வைப்பதற்கு முயன்ற மனிதர் இப்போது வெட்கப்பட்டு நிற்கிறார்.”
ஒருவருக்கு அவமானத்தை ஏற்படுத்த முயலுவது இஸ்லாமியப் போராட்டத்தில் ஒரு பகுதி அல்ல என்றும் நிக் அஜிஸ் சொன்னார்.
“நான் களைப்பாக இருக்கிறேன் ஆனால் ஆரோக்கியமாக இருக்கிறேன்”
அந்த மூத்த அரசியல்வாதி கோத்தா பாருவில் உள்ள தமது அதிகாரத்துவ இல்லத்தில் அந்தப் பேட்டியை வழங்கினார். கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு 81 வயது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவர் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டார்.
“நான் கடந்த வாரம் ஐஜேஎன்-னில் என்னுடைய இருதயத்தைச் சோதனை செய்து கொண்டேன். எல்லாம் நன்றாக இருந்தது. இறைவனுக்கு நன்றி,” என்றார் அவர்.
நிக் அஜிஸின் இருதய ரத்த நாளத்தில் மூன்று அடைப்புக்கள் இருப்பது கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டு பிடிக்கப்பட்டது. அவர் இப்போது அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
என்றாலும் என் பணிகள் “மறுமைக்கு மிக முக்கியமானவை. தமது கடமைகளைத் தொடரத் தாம் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
கிளந்தான் மாநில தலைமை நிர்வாகி என்னும் முறையில் அவர் எதிர்நோக்கும் சவால்களில் ஒன்று கிழக்குக் கடலோர மாநில நீரளிப்பு பிரச்னையாகும். அந்த விஷயம் பாஸ் கட்சியின் எதிரியான அம்னோவுக்கு தேர்தல் பிரச்சாரத் தலைப்பாகி விட்டது.
‘கிளந்தானில் மட்டும் தண்ணீர் பிரச்னை நிலவவில்லை’
கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து போதுமான நிதிகளை கிளந்தான் பெறவில்லை எனக் குறிப்பிட்ட நிக் அஜிஸ், கிளந்தான் மட்டும் நீர் விநியோகப் பிரச்னைகளை எதிர்நோக்கவில்லை என்றார்.
மாநிலத்தில் பழைய நீர்க் குழாய்களை மாற்றுவதற்கு அந்த நிதி அவசியமாகும். அத்துடன் அந்த மாநிலத்துக்கு தெனாகா நேசனல் பெர்ஹாட் மின்சாரம் வழங்குவதிலும் அடிக்கடி தடை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“மின் தடை ஏற்படும் போது நீர் இறைப்புக் குழாய்கள் நின்று விடுகின்றன. அவற்றை மீண்டும் இயங்கச் செய்வதற்கு ஆறு மணி நேரமாகிறது.”
மின் தடையால் நீர் விநியோகம் மட்டும் நிற்கவில்லை. மாநிலத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும் இழப்புக்கள் ஏற்படுகின்றன.”
‘அழியா மை மட்டும் போதாது’
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர் பட்டியலின் நேர்மையே மிக முக்கியமான அம்சம் என அவர் சொன்னார்.
“தாய்லாந்தில் உள்ள மலாய்க்காரர்களுக்கு இப்போது நீல நிற அடையாளக் கார்டுகள் கொடுக்கப்படுவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றும் நிக் அஜிஸ் சொன்னார்.
அரசாங்கமும் அதன் அமைப்புக்களும் அறிவித்துள்ள அழியா மையைப் பயன்படுத்துவது உட்பட பல தேர்தல் சீர்திருத்தங்கள் மீது நிக் அஜிஸ் முழுமையாக நம்பிக்கை வைக்கவில்லை. காரணம் “முக்கியமான பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.”
என்றாலும் கூட்டரசு அரசாங்கம் ஜனநாயகக் கோட்பாடுகளை மதித்து பண அரசியலில் ஈடுபடா விட்டால் கிளந்தானை பாஸ் மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் என நிக் அஜிஸ் நம்புகிறார்.