நற்செயல்களுக்கு ஆதரவளிப்போம் மூக்கை நுழைத்து குழப்பக்கூடாது

இராகவன் கருப்பையா – சினிமாவில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் கூட ஒரு கதாநாயகன் இருக்குமிடத்தில் எப்படியாவது ஒரு வில்லனும் முளைத்துவிடுவது இயல்பான ஒன்று. நம் நாட்டுச் சூழலில் இதனை ‘நண்டுக் கதை’ என்று கூட சில வேளைகளில் சித்தரிப்பார்கள்.

இந்நாட்டில் நம் சமூகம் பின்தங்கியிருப்பதற்கு இத்தகைய அவலமும் ஒரு காரணம்தான் எனும் யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பல இடங்களில் பல்வேறுத் தருணங்களில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

நம் சமூகத்தைச் சார்ந்த மொத்தம் 19 அரசு சாரா இயக்கங்களை உள்ளடக்கிய, Gelombang Saksama(சமத்துவ அலை) எனும் ஒரு பேரவை ‘பெர்சமா’ கட்சியின் நிர்வாகத்தை கடந்த வாரம் சென்று சந்தித்தது.

முன்னாள் அமைச்சர் ரஃபிஸி ரம்லி தலைமையிலான பெர்சமா கட்சி, இந்நாட்டின் இந்தியர்களுக்கான சமூக-பொருளாதார உருமாற்றத்தை தனது செயல்திட்டங்களில் கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்த பேரவையின் பிரதானக் கோரிக்கையாகும்.

நம் சமூதாயத்தின் மேம்பாட்டை முன்னிருத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னெடுப்புக்கு மற்ற இனத்தவரெல்லாம் பேசாமல் இருக்கும் வேளையில், நம் இனத்தைச் சார்ந்த சிலருக்கு மட்டும் ஏன் பிடிக்காமல் போய்விட்டது என்றுதான் நமக்குப் புரியவில்லை.

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய சமூகம் மீது ஏன் திடீரென இப்போது அக்கரை வந்துவிட்டது,” என சிலாங்கூர்-கூட்டரசுப் பிரதேச இந்திய வர்த்தகச் சபையின் தலைவர் ஸ்தீவன் தேவேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருடைய இந்த எதிர்மறையானக் கருத்து, முற்றிலும் தேவையில்லாத, ஒரு வீண் விதண்டாவாதம் என்றே நமக்குத் தோன்றுகிறது.

ஒரு நல்ல காரியத்தை யார் எப்போது செய்தால் என்ன? சமுதாய நலன் கருதிதானே அவர்கள் செய்கிறார்கள், எனும் பெருந்தன்மை வேண்டும். அநாவசியமாக மூக்கை நுழைத்து குட்டையைக் குழப்பக் கூடாது.

நிறைய பேருக்கு இவர் யார் என்று கூட தெரியாது. இவர் சார்ந்த இயக்கம் நம் சமூகத்தைச் சேர்ந்த சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு இதுவரையில் செய்துள்ள நற்காரியங்கள் யாவை என்று கூட வெகுசன மக்களுக்குத் தெரியாது.

இவர்களுடைய நிலைமை இவ்வாறு இருக்க, ஒரு பொருளாதார நிபுணரான, சிலாங்கூர், கிளேங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, ‘மைஸ்கில்ஸ்’ அறவாரியத்தின்((Myskills foundation) தோற்றுனரான பிரபல வழக்கறிஞர் பசுபதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன், போன்றோர் சமுதாய நலன் கருதி முன்னெடுத்துள்ள ஒரு நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட முனையக் கூடாது.

ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் எதிர்மறையானக் கருத்துகளை வெளியிட்டு பொது மக்களிடையே தேவையில்லாதக் குழப்பங்களுக்கு வித்திடக் கூடாது.

ரஃபிஸி உள்பட பல துடிப்புமிக்க இளம் அரசியல்வாதிகளால் தோற்றுவிக்கப்பட்ட ‘பெர்சமா’ எனும் புதிய பல்லின அரசியல் கட்சி இந்நாட்டில் மிகத் துரிதமாக வளர்ச்சி கண்டு வரும் ஒரு அரசியல் பேரியக்கமாகும்.

எனவே ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்,’ எனும் நிலைப்பாட்டில்தான் அந்த 19 அரசு சாரா இயக்கங்களும் அக்கட்சியின் தலைமைத்துவத்தை சந்தித்து தங்ளுடைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அனைத்துத் தரப்பினராலும் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு முயற்சியாகும்.

தொடர்ச்சியான வறுமை, பாகுபாடு மற்றும் அதிகரித்து வரும் சமூக-பொருளாதார இடைவெளி, போன்ற குறைகளைக் களைந்து, தேசிய நீரோட்டத்தில் நம் சமூகம் முக்கிய பங்காற்றுவதற்கான நடவடிக்கைகளும் அந்தக் கோரிக்கைகளில் அடங்கும்.

இந்திய விவகாரங்களுக்கான உயர்நிலை அரசியல் கண்காணிப்பு மற்றும் அமைச்சுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, முதலியவற்றை கவனிப்பதற்கான

சிறப்பு அமைச்சரவைக் குழுவை மறுநியமனம் செய்வது குறித்தும் அந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.