மலாக்கா தேர்தல் கூட்டணிக்கு பக்காத்தான் ஹரப்பான் தயார் – அமிருதின்

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் தனித்துப் போட்டியிடும் என்று அந்த மாநிலத்தின் டிஏபி தலைவர் கூ போய் தியோங் கூறிய போதிலும், தேர்தல் உடன்பாடுகளுக்குக் கூட்டணி இன்னும் தயாராகவே உள்ளது என்று பக்காத்தான் தேர்தல் இயக்குனர் அமிருதின் ஷாரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், சூழ்நிலை தேவைப்பட்டால் பக்காத்தான் தனித்து களமிறங்கி, அனைத்து 28 இடங்களிலும் போட்டியிடுவதை நிராகரிக்க முடியாது.

தனித்துப் போட்டியிடுவது, மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது அல்லது ஒரு பெரிய கூட்டணியில் இணைவது என அனைத்து சாத்தியக்கூறுகளுக்கும் மலாக்கா பக்காத்தான் தயாராக உள்ளது என்று பக்காத்தான் கட்சியின் துணைத் தலைவரான அவர் குறிப்பிட்டார்.

இறுதி முடிவு பக்காத்தான் ஹரப்பான் தலைவர் மன்றத்தின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று அமிருதின் கூறினார்.

தற்போது பக்காத்தான் கூட்டணி 18 முதல் 21 இடங்கள் வரை போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி குறைந்தது 18 முதல் அதிகபட்சமாக 21 இடங்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. இருப்பினும், சூழ்நிலை கட்டாயப்படுத்தினால், நாங்கள் அனைத்து 28 தொகுதிகளிலும் போட்டியிடக்கூடும், என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் மலாக்கா மாநில பக்காத்தான் தலைவர் அட்லி ஜஹாரி, கூ மற்றும் மாநில அமானா தலைவர் அஷ்ரப் முக்லிஸ் மிங்ஹாத் ஆகியோரும் உடனிருந்தனர்.

குறிப்பாக அண்மையில் இரு கட்சிகளின் மாநிலப் பிரிவு தலைவர்கள் பங்கேற்ற இரவு விருந்து ஒன்றிற்குப் பிறகு, பெர்சத்து கட்சியுடன் பக்காத்தான் கூட்டணி அமைக்கக்கூடும் என்று இணைத்துப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இரவு விருந்தில் டிஏபி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

நேற்று, மலாக்கா தேர்தலில் பக்காத்தான் தனித்துப் போட்டியிடும் என்று கூ தெரிவித்திருந்தார்.

மலாக்கா மாநில பக்காத்தானின் துணைத் தலைவருமான அவர், கூட்டணி தனித்து களம் காண்பதற்கு மூன்று அங்கத்துவக் கட்சிகளும் மாநில அளவில் ஒப்புக்கொண்டுள்ளன என்றும், தங்களின் இந்த நிலப்பாடு குறித்து மத்திய தலைமைத்துவத்திடம் விளக்கி, அவர்களின் கருத்துகளைப் பெறவுள்ளதாகவும் உரிமை கோரினார்.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாரிசான் நேஷனல் கூட்டணி, வரும் நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கான சாத்தியமான உடன்பாடுகள் குறித்து, கூட்டணியமைக்க வாய்ப்புள்ள அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.

முன்னதாக, ஆகஸ்ட் 1 அன்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் தேர்தலில் தங்களின் கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மலாக்காவில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியுடன் இணைந்து செயல்படப் போவதாக பாரிசான் தனது விருப்பத்தை முதலில் தெரிவித்திருந்த போதிலும் இந்த புதிய முடிவை எடுத்துள்ளது.

பாரிசான் கூட்டணியுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து பக்காத்தானின் உயர்மட்டத் தலைமை இன்னும் பரிசீலித்து வருகிறது என்று கூறிய அமிருதின், இதுகுறித்து தலைவர் மன்றத்தின் முடிவை முந்திக்கொண்டு தான் எதுவும் பேச விரும்பவில்லை எனக் கூறி மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

 

 

 

-fmt