ஜனவரி முதல் மலேசியாவில் வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் பணியாற்ற அனுமதி.

இந்த நடவடிக்கை, சார்ந்திருப்போர் அனுமதிச் சீட்டு (Dependant Pass) வைத்திருக்கும் வாழ்க்கைத் துணைவர்களுக்குப் பொருந்தும்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெளிநாட்டிலிருந்து வரும் திறமையாளர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் தங்களது தொழில் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமின்றி, உலகளாவிய திறமையாளர்களை மலேசியா ஈர்க்க விரும்புகிறது என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு அனுமதி (Category I Employment Pass) பெற்ற வெளிநாட்டவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 2027 ஜனவரி 1 முதல் மலேசியாவில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சார்ந்திருப்போர் அனுமதி (Dependant Pass) வைத்திருக்கும் வாழ்க்கைத் துணைவர்களுக்குப் பொருந்தும்.

வெளிநாடுகளில் இருந்து உயர்தரத் திறமையாளர்களை ஈர்ப்பதற்கும், அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் தங்களுடைய தொழில் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படாமல் மலேசியாவைச் சிறந்த இடமாகத் தக்கவைத்துக்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஏற்கெனவே, டிஜிட்டல் நாடோடிகள் (Digital Nomads) பிரிவின் கீழ் தொழில்முறை வருகை அனுமதி (Professional Visit Pass) பெற்று, இரண்டு ஆண்டு கால வரம்பை எட்டியிருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மலேசியாவில் தொடர்ந்து வசித்துக்கொண்டு தொலைதூரப் பணிகளைச் செய்வதற்காக மேலும் இரண்டு ஆண்டுகள் அனுமதி வழங்கப்படும்.

மேலும், உலகளாவிய சேவை மையங்கள் (Global Services Hub – GSH) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகளை, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மேம்படுத்தப் போவதாகவும் அன்வார் தெரிவித்தார். இதன் நோக்கம், மேலும் பல உலகளாவிய நிறுவனங்களையும் திறமையான பணியாளர்களையும் மலேசியாவுக்கு ஈர்ப்பதாகும்.

திருத்தப்பட்ட வரிச் சலுகைகளின் முக்கிய அம்சங்கள்:

– புதிய நிறுவனங்களுக்கு: உலகளாவிய சேவை மையச் செயல்பாடுகள் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு 5% என்ற சிறப்பு வரி விகிதம் வழங்கப்படும்.

– ஏற்கெனவே செயல்படும் நிறுவனங்களுக்கு: நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை வருமான அளவை (Prescribed Baseline) தாண்டி ஈட்டப்படும் வருமானத்திற்கு 5% வரி விகிதம் பொருந்தும்.

– வரி சலுகைக் காலம்: ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும். அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை இந்தச் சலுகையைப் பெறலாம்.

– கருவூல மேலாண்மை மற்றும் நிதி மேலாண்மை நிறுவனங்களுக்கு: வட்டி செலுத்துதல்களுக்கான பிடித்தம் செய்யப்படும் வரியிலிருந்து (Withholding Tax) விலக்கு அளிக்கப்படும். மேலும், நிறுவனங்களுக்கு இடையிலான கடன் ஒப்பந்தங்களுக்கு முத்திரைத் தீர்வையிலிருந்தும் (Stamp Duty) விலக்கு வழங்கப்படும்.

இந்த வரிச் சலுகைகள், ஜொகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டல (Johor-Singapore Special Economic Zone – JS-SEZ) திட்டத்தின் கீழ் வரும் தொடர்புடைய செயல்பாடுகளுக்கும் பொருந்தும்.