பகாங் பாரிசான் நேசனல் (பிஎன்), 13வது பொதுத் தேர்தலில் அம்மாநிலத்தில் எதிர்த்தரப்பிடம் உள்ள அத்தனை இடங்களையும் கைப்பற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. மந்திரி புசார் அட்னான் யாக்கூப் இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்றிரவு மூவாயிரம் பிஎன் மகளிர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், இப்போது திசைமாறி வீசத்தொடங்கியிருக்கும் அரசியல் காற்று தமக்கு அந்த நம்பிக்கையைத் தருகிறது என்றார். என்றாலும், அது சவால்மிக்க பணியாகவும் விளங்கும் என்றாரவர்.
“குவாந்தான் நாடாளுமன்றத் தொகுதி, லைனாஸ் விவகாரம் காரணமாக பிரச்னை கொடுக்கலாம். ஆனால், இந்திரா மக்கோத்தாவில் பிரச்னை இருக்காது.
“செமந்தான், பெசிரா சட்டமன்றத் தொகுதிகளிலும் பிரச்னை இருக்காது. கடுமையாக பாடுபட்டால் ட்ரியாங், ட்ராஸ் தொகுதிகளையும் திரும்பப் பெற முடியும்”, என்றவர் வலியுறுத்தினார்.
கடந்த காலத் தவறுகள் பாடமாக அமைய வேண்டும்.பலவீனங்களைக் களைய அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும்.
பிஎன் இளைஞர்களும் மகளிரும் புத்ரிகளும் அடிநிலை மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முயல வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
“வேட்பாளர் யார், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற கேள்வியெல்லாம் வேண்டாம். வெற்றிபெறுவதும் மக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும்தான் முக்கியம்”, என்று அட்னான் கூறினார்.
கட்சிக்குக் கேடு செய்யக்கூடிய சிறுசிறு விவகாரங்களை ஒதுக்கித்தள்ள வேண்டும் என்பதையும் அவர் உறுப்பினர்களுக்கு நினைவுறுத்தினார்.
-பெர்னாமா