சொத்துக்கள் அறிவிக்கப்படுவதை மகாதீர் ஆதரிக்கிறார்

அரசாங்க அல்லது பொதுப் பதவிகளை வகிக்கின்றவர்கள் தங்களது சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறார். ஆனால் சொத்து விவரங்கள் “சுயேச்சையான அமைப்பு” ஒன்றிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என அவர் பரிந்துரை செய்கிறார்.

“அரசியல் நோக்கங்களுக்கு அந்த விஷயத்தைப் பயன்படுத்தாத ஒர் அமைப்பிடம் சொத்துக்களை அறிவிப்பது நல்லதாக இருக்கும்,” என அவர் மசீச நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் நிருபர்களிடம் கூறினார்.

“யார் பக்கமும் சாயாத நடு நிலையான அமைப்பு ஒன்றிடம் தெரிவித்தால் போதும் என நான் எண்ணுகிறேன்.”

“அமைச்சர்களுடைய துணைவியர்/துணைவர்கள் தங்கள் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகத்திடம் அறிவிக்க வேண்டும் என அண்மையில் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஆலோசனை வாரியத் தலைவர் ஜைத்தோன் ஸாவியா பூத்தே தெரிவித்துள்ள யோசனை பற்றி மகாதீர் கருத்துரைத்தார்.

அவ்வாறு அறிவிக்கப்படும் விவரத்தின் ஒரு பிரதியும்  எம்ஏசிசி-யிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அரசாங்கப் பதவிகளை வகிக்கின்றவர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்ற கொள்கையை அமலாக்க எம்ஏசிசி நடவடிக்கை எடுக்காதது பற்றி எதிர்க்கட்சிகள் அதனைக் குறை கூறியிருந்தன.

அத்தகைய நடவடிக்கை சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு ‘ஆபத்தாக’ முடியலாம் என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

பிரதமர் வலியுறுத்தினால் தவிர அந்த சொத்து விவரங்களை எம்ஏசிசி-யிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சட்டத் துறைக்குப் பொறுப்பான அந்த அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஒருவர் தமது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பதால் அவர் பல வகையான “அவதூறுகளை” எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நஸ்ரி கூறிய கருத்துக்களை மகாதீர் ஏற்றுக் கொண்டார்.

“நமக்கு அது வேண்டாம்… மக்கள் ஒற்றுமை தேச நிர்மாணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் அதில் ஈடுபாடு காட்டத் தொடங்கி விடுவர்.”

தற்போது கூட்டரசு அமைச்சர்கள் மட்டும் தங்கள் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் பிரதமரிடம் அறிவிக்க வேண்டும் என்பதை மகாதீர் சுட்டிக் காட்டினார்.

“நான் பல விஷயங்களைக் கண்டு பிடித்தேன்,” என வெளிப்படையாகப் பேசும் அந்த முன்னாள் பிரதமர் நகைச்சுவையாகக் கூறினார்.

பொருத்தமில்லாத முறையில் சொத்துக்களைச் சேர்த்ததாகக் கண்டு பிடிக்கப்படும் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட நடவடிக்கை பற்றியும் அவரிடம் வினவப்பட்டது,

அதற்குப் பதில் அளித்த மகாதீர்,” அமைச்சர்களாகப் பொறுப்பேற்கும் மக்கள் கௌரவமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் கௌரவமாக இல்லையென்றால் உதைத்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு தயவு செய்து பதவி துறந்து விடுங்கள்.”

TAGS: