அடுத்த பினாங்கு பிஎன் தலைவர் குறித்து கோ மௌனம் சாதிக்கிறார்

கெரக்கான் கட்சியின் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயாவ் அடுத்த பினாங்கு பிஎன் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற ஊகங்கள் பற்றிக் கருத்துரைக்க கெரக்கான் தலைவர் கோ சூ கூன் மறுத்துள்ளார்.

அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை பிஎன் கூட்டணித் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் முடிவு செய்வார் என கோ சொன்னார்.

“நாம் அந்த முடிவுகள் அல்லது அறிவிப்புக்கள் மீது முன் கூட்டியே எதுவும் சொல்லக் கூடாது என நான் நினைக்கிறேன். பிஎன் அமைப்பு விதிகளின் கீழ் பிஎன் உச்ச மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அது செய்யப்பட வேண்டும் என நான் கருதுகிறேன்,” என்றார் கோ.

கோலாலம்பூரில் கெரக்கான் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது கோ நிருபர்களிடம் பேசினார்.

கடைசியாக பிஎன் உச்ச மன்றக் கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது என்றார் அவர்.

“அடுத்த கூட்டத்துக்கான தேதி இன்னும் நிச்சயிக்கப்படவில்லை,” எனக் கூறிய அவர், அந்தப் பதவிக்கான வேட்பாளர் பெயர்களைக் கட்சி தெரிவித்து விட்டதா என்ற விவரத்தை தர மறுத்து விட்டார்.

13வது பொதுத் தேர்தலில் பினாங்கில் பிஎன் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு தெங்-கிற்கு வழங்கப்படும் என உள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி மலேசியா இன்சைடர் செய்தி இணையத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

பினாங்கு மாநில கெரக்கான் ஏற்பாடு செய்துள்ள சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது நஜிப் அதிகாரப்பூர்வமாக அந்த அறிவிப்பைச் செய்வார் என்றும் அது கூறியது.

பொதுத் தேர்தலில் கெரக்கானுக்கு மசீச-வைக் காட்டிலும் கூடுதலான இடங்கள் கெரக்கான் வேட்பாளர்களுக்குக் கொடுக்கப்படும் என்றும் அந்தத் தகவல் குறிப்பிட்டது.

பதில் அளிக்குமாறு நெருக்கப்பட்ட போது கோ சொன்னார்: ” ஆரூடமாக தெரிவிக்கப்பட்ட எந்தத் தகவல் மீதும் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. அமைப்பு விதிகளுக்கு இணங்க எல்லாம் முறையான வழிகளில் செய்யப்பட வேண்டும்.”

TAGS: