பினாங்கில் மத மாற்றத்துக்கு எதிரான பேரணி ஆயிரம் பேருடன் தொடங்கியது

கெப்பாளா பத்தாஸில் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கூட்டமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த ஹிம்புன் பேரணி, சமய இசை நிகழ்ச்சிகளுடன் இன்று காலை தொடங்கியது.

அதில் சர்ச்சைக்குரிய பல தலைவர்கள் தீவிரமான உரைகளை நிகழ்த்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலாய், ஆங்கிலம், தமிழ், சயாமிய மொழிகளில் இசை நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.

அந்த மூன்று மணி நேர நிகழ்வுக்காக தேவான் பூடி பென்யாயாங்- அரங்கில் ஆயிரம் பேர் கூடியுள்ளனர்.

அந்த அரங்கில் ஆண்கள் வலப்பக்கமும் பெண்கள் இடப்பக்கமும் அமர்ந்துள்ளனர்.

ஹிம்புன் பேரணியை ஒட்டி மண்டபத்துக்கு வெளியில் பல கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால் அங்கு விழாக் கோல உணர்வு தென்பட்டது.

பினாங்கு, கெடா மாநிலங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட மக்கள் அதில் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களில் ஒரு பகுதியினரே இன்று இதுவரை கலந்து கொண்டுள்ளனர்.

அண்மையில் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி இன்று காலை மணி 11 வாக்கில் அந்தப் பேரணியில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஹிம்புன் பேரணிகளில் முதலாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிலாங்கூரில் நடத்தப்பட்டது. முஸ்லிம் சமூகத்தில் கிறிஸ்துவ மயமாக்கும் நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவதற்கு எதிராக ஆட்சேபம் தெரிவிப்பது அந்தப் பேரணிகளின் நோக்கமாகும்.

பினாங்கு மாநில அரசாங்கம் அந்த நிகழ்விலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளது. அதனைத் தான் அங்கீகரிக்கவில்லை என்றும் பங்கு கொள்ளப் போவதில்லை என்றும் அது அறிவித்துள்ளது.

TAGS: