ஏபியூ செராமாவில் “அடிக்கப்பட்டது” மீது போலீசில் புகார்

அம்னோவை தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்னும் ஏபியூ அமைப்பு ஏற்பாடு செய்த செராமா ஒன்றில் ஒர் இளைஞர் “அடிக்கப்பட்டது” மீது சுவாராம் நிர்வாக இயக்குநர் இ நளினி போலீசில் புகார் செய்துள்ளார்.

நேற்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அந்தப் புகாரை அவர் சமர்பித்தார்.

தாமும் தமது தோழி எம் சிவரஞ்சினியும் அந்த சம்பவத்துக்கு முக்கியமான சாட்சிகள் என்றும் அதனால் போலீஸ் விசாரணைக்கு தாங்கள் உதவ முன் வருவது அவசியம் என்றும் தாங்கள் கருதியதாகவும் தொடர்பு கொள்ளப்பட்ட போது நளினி கூறினார்.

“நாங்கள் முக்கியமான சாட்சிகள் காரணம் அந்த நேரத்தில் வெளியில் பலர் நிற்கவில்லை,” என்றார் அவர்.

கடந்த சனிக்கிழமையன்று ஷா அலாம் ஜாலான் கெபுனில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் ஏபியூ ஏற்பாடு செய்திருந்த செராமாவுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கும்பல் ஒன்று அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை தாக்கியது.

நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சென்று கொண்டிருந்த நளினி நுழைவாயிலைக் கடந்து சென்றார்.  மண்டபத்திலிருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் வெளியேறியதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

“நாங்கள் எங்கள் காரை நிறுத்தி மோட்டார் சைக்கிள்களுக்கு வழி விட்டோம். பின்னர் ஒர் இந்திய சிறுவன் வெளியில் வந்ததைப் பார்த்தோம்,” என்றார் அவர்.

“அவர் கம்புகளினாலும் தலைக்கவசங்களினாலும் அடிக்கப்பட்டிருந்தார்.”

பங்கேற்பாளர்களை மிரட்டிய அந்தக் கும்பலை நோக்கி அந்தச் சிறுவன் ஏதோ சொல்லியிருக்க வேண்டும். அதற்குப் பின்னர் அவர்கள் அவனை அடிக்கத் தொடங்கினர்.”

“ஆறு முதல் ஏழு பையன்கள், எல்லாரும் இளைஞர்கள் அந்தச் சிறுவனை கம்புகளினாலும் தலைக்கவசங்களினாலும் அடித்தனர். முட்டாள், கிளிங் (இந்தியர்களுக்கு அவமானத்தைத் தரும் சொல்) போன்ற சொற்களைக் கூறினர்.”

அவர்கள் என்னுடைய காரையும் தாக்கினர். என்னை நோக்கிக் கூச்சலிட்டு உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கோரினர் என்றும் நளினி தெரிவித்தார்.

“நாங்கள் வெளியேறி மீண்டும் திரும்ப வந்தோம். மண்டபத்துக்கு முன்புறம் 30 பேர் கம்புகளுடன் நின்று கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். என்றாலும் நாங்கள் மண்டபத்துக்குள் சென்று விட்டோம்.”

அந்தச் சம்பவம் மீது போலீஸ் முழு விசாரணை நடத்த வேண்டும் என நளினி கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் போலீஸ் விசாரிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். முறையான விசாரணையையும் நாங்கள் நாடுகிறோம்,” என்றார் அவர்.

TAGS: