நஜிப் பத்துமலைக்கு வருகை புரிவதை பிகேஆர் ஆட்சேபிக்கிறது

அடுத்த வாரம் நிகழும் தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி பத்துமலை கோயில் வளாகத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருகை அளிப்பதின் நோக்கம் “அரசியல் ஆதாயம்” தேடுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என பிகேஆர் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர் நடவடிக்கையாக, பிகேஆர் கெப்போங் தகவல் பிரிவுத் தலைவர் எம் எஸ் அர்சுனனும் இளைஞர் தலைவர் ஏ கலை முகிலனும் பிப்ரவரி 7ம் தேதி அந்தக் கோயிலுக்கு நஜிப் மேற்கொள்ளும் ஆண்டு வருகையை ஆட்சேபித்து கடந்த புதன்கிழமை போலீசில் புகார் செய்துள்ளனர்.

கடந்த வாரம், சுங்கைப் பட்டாணி ஸ்ரீ சுப்ரமணியர் ஸ்வாமி தேவஸ்தானக் கோயில் குழு, தைப்பூசக் கொண்டாட்டங்களின் போது கோவில் வளாகத்தில் அன்வார் இருந்தால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழக் கூடும் என அஞ்சி அவரது வருகைக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் போலீஸ் புகாரைச் சமர்பித்தது.

நஜிப் அதற்கு இணங்காவிட்டால் அவரது வருகைக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு 100 உறுப்பினர்களைத் தாங்கள் ஒன்று திரட்டப் போவதாக அர்சுனனும்  கலை முகிலனும் அறிவித்தனர்.

பத்துமலையில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய வளாகத்துக்கு வருகை அளிக்கும் இரண்டாவது பிரதமர் நஜிப் ஆவார். அவரது தந்தையும் இரண்டாவது பிரதமருமான அப்துல் ரசாக் ஹுசேன் அந்தக் கோவிலுக்குத் தைப்பூசத்தின் போது வருகை அளித்துள்ளார்.

“இந்தியர்களிடமிருந்து நல்ல ஆதரவை தமது கட்சியான பிஎன் பெறாது என்பது நஜிப்புக்கு நன்கு தெரியும்,” எனக் கலை முகிலன் ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

தைப்பூசக் கொண்டாட்டங்கள் “அரசியலிலிருந்து விடுபட்டதாக” இருக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் அந்தக் கோவில் குழுத் தலைவர் ஆர் நடராஜாவையும் அவர் சாடினார்.

கோவில் நிர்வாகம் நேர்மையாகவும் நடு நிலையாகவும் நடந்து கொள்ள வேண்டும். எந்தக் கட்சியின் பக்கமும் சாயக் கூடாது. அது நஜிப்பை அழைத்தால் எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமையும் அழைக்க வேண்டும்,” என்றார் அவர்.

நஜிப் வருகையின் போது பாதுகாப்பு மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் அது பக்தர்களுக்கு இடையூறாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

TAGS: