ஜோகூர் பாஸ் தலைவருடைய காரும் வீட்டு வரவேற்பு அறையும் தீயில் சேதமடைந்தன

ஜோகூர் பாஸ் துணை ஆணையாளர் டாக்டர் சுல்கெப்லி அகமட்-டின் பிஎம்டபிள்யூ காரும் அவரது வீட்டின் வரவேற்பு அறையும் இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீ வைப்பு என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் சேதமடைந்தன.

ஸ்கூடாய்க்கு அருகில் உள்ள தாமான் யூனிவர்சிட்டியில் வசிக்கும் அவர் அதிகாலை மணி 3.40 வாக்கில் அந்தச் சம்பவம் நிகழ்ந்த போது தமது வீட்டின் மாடியில் சுல்கெப்லி உறங்கிக் கொண்டிருந்தார்.

பலத்த வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதும் தாமும் தமது மனைவியும் விழித்துக் கொண்டதாக அந்த பாஸ் தலைவர் சொன்னார்.

“பிஎம்டபிள்யூ காரின் எந்திரம் எரிந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். வீட்டின் வரவேற்பு அறையிலும் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது,” என சுல்கெப்லி ஹராக்கா நாளேட்டிடம் கூறினார்.

“பின்னர் இன்னொரு வெடிப்புச் சத்தம் கேட்டது. பின்னர் உடனடியாக நான் என் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை வீட்டின் பின்புறக் கதவு வழியாக வெளியேற்றினேன்.”

தாம் தீயணைப்புத் துறையை அழைத்ததாகவும் சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர் என்றும் சுல்கெப்லி தெரிவித்தார்.

“அந்த பிஎம்டபிள்யூ கார் முற்றாக நெருப்பில் கருகி விட்டது. வரவேற்பு அறையும் நெருப்பில் நாசமடைந்து விட்டது.”

“பிஎம்டபிள்யூ காருக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  டோயோட்டா காம்ரி காரில் ஒரு பகுதி மட்டுமே நெருப்பில் சேதமடைந்துள்ளது. அதனை சரி செய்ய முடியும் என நான் நம்புகிறேன்.”

ஜோகூர் மேம்பாட்டுக் கழகம், கேஎப்சி விரைவு உணவுக் கடைகள் போன்ற விவகாரங்களில் சுல்கெப்லி வெளிப்படையாக பேசி வருவதால் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தாம் சந்தேகிப்பதாக இன்னொரு ஜோகூர் பாஸ் துணை ஆணையாளரான மஸ்லான் அலிமான் கூறினார்.

“போலீஸ் அந்த விவகாரத்தை ஆழமாக புலனாய்வு செய்யும் என நாங்கள் நம்புகிறோம்,” என மஸ்லான் சொன்னார்.

TAGS: