அடுத்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அப்துல் ஹாடி அவாங் அறிவித்துள்ளதை பாஸ் ஏகமனதாக நிராகரித்துள்ளது.
நேற்று நடைபெற்ற அந்தக் கட்சியின் அரசியல் பிரிவுக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
“அப்துல் ஹாடியும் அந்த முடிவை ஏற்றுக் கொண்டு விட்டார். அவர் அடுத்த தேர்தலில் சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார்,” என அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்துக்கான போராட்டம் குறிப்பிட்ட கால வரம்புக்கு உட்பட்டதல்ல ஒருவருடைய ஆயுட்காலம் வரை தொடர வேண்டும் என கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறிய கருத்தை பாஸ் ஒப்புக் கொண்டதாகவும் துவான் இப்ராஹிம் சொன்னார்.
“ஒருவருடைய பதவிகள் மாறலாம். ஆனால் கட்சியை வழி நடத்துவதற்கு பாஸ் கட்சிக்கு அப்துல் ஹாடி இன்னும் தேவை. அவர் பக்காத்தானை வழி நடத்த வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் தலைவர்களும் அது போன்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்,” என்றும் துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
“அப்துல் ஹாடியிடம் மக்களை ஈர்க்கக் கூடிய ஆற்றலும் கட்சியை வழி நடத்துவதற்கான தலைமைத்துவப் பண்புகளும் நிறைந்துள்ளன. அத்துடன் இஸ்லாமிய நாடுகள் பிரச்னைகளை எதிர்நோக்கும் வேளையில் அனைத்துலக இஸ்லாமிய இயக்கமும் அவரது தலைமைத்துவம் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அப்துல் ஹாடி இந்த நூற்றாண்டில் போற்றத்தக்க முஸ்லிம் தலைவர் ஆவார்.’
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் அப்துல் ஹாடி போட்டியிடுவாரா இல்லையா என்பது இனிமேலும் பிரச்னையாக இருக்காது.
அப்துல் ஹாடியின் நோக்கம், அவருடைய தன்னடக்கத்தையும் உயர்ந்த இஸ்லாமியப் பண்புகளையும் காட்டுகிறது என்றும் துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார். பாஸ் கட்சியில் பதவி என்பது ஒருவர் போட்டியிடுவதற்கு உரியது அல்ல. மாறாக அது பொறுப்பாகும். நம்பிக்கை அடிப்படையில் அது அமைந்துள்ளது.
“பதவிகளை நாடி அலைய வேண்டாம் என இஸ்லாம் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. என்றாலும் கூட்டத்தினர் நம்பிக்கை வைக்கும் போது விலகிப் போகக் கூடாது என்றும் அது நமக்குப் போதித்துள்ளது. அவரது தலைமைத்துவம் இன்னும் நமக்குத் தேவை,” என துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடத் தாம் விரும்பவில்லை என அப்துல் ஹாடி கடந்த மாதம் அறிவித்தார். என்றாலும் பாஸ் தலைவருமான அவர், தமது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராஹிமும் நிக் அஜீஸும் அறிவுரை கூறினர்.