ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம் மீது பிஎஸ்சி அமைக்கப்பட வேண்டும்: டிஎபி

ஒரே பராமரிப்பு சுகாதாரத்  திட்டத்தை அமலாக்குவது மீது முடிவு எடுக்கும் முன்னர் அது குறித்து ஆழமாக ஆராய பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என டிஏபி விரும்புகிறது.

“எந்த முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றம், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் 12 மில்லியன் மலேசியத் தொழிலாளர்கள் ஆகியோருடன் முழுமையாக ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.”

“அந்தத் திட்டம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகளின் விவரங்களை வெளியிட வேண்டிய தார்மீகப் பொறுப்பை அரசாங்கமும் சுகாதார அமைச்சும் கொண்டுள்ளன,” என்று புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சின் தொங் கூறினார்.

‘தனியார் துறை  ஆதாயத்துக்கு வழி வகுத்து விடும் என பெரிதும் குறை கூறப்பட்டுள்ள அந்தத் திட்டத்தின் சுமையை மக்கள் தாங்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அதனை ஆராய பிஎஸ்சி-யை அமைப்பதுதான் ஒரே வழி,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அந்தத் திட்டம் இன்னும் ‘குழந்தைப் பருவத்திலேயே இருப்பதாக சுகாதார அமைச்சு கூறிக் கொள்ளும் வேளையில் அந்தத் திட்டம் “மிக மிக முன்னேறிய கட்டத்தில்” இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி மலேசியா இன்சைடர் செய்தி வெளியிட்டுள்ளதை லியூ சுட்டிக் காட்டினார்.

அனைத்து மலேசியர்களுக்கும் சமமான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அனைத்து மக்களும் அந்தத் திட்டத்தில் கட்டாயமாக பங்கேற்க வேண்டிய சாத்தியம் இருப்பதாக சுகாதார அமைச்சின் தேசிய சுகாதார நிதி அளிப்புப் பிரிவின் துணை இயக்குநர் டாக்டர் ரொஸித்தா ஹாலினா நேற்று கூறியிருந்தார்.

அந்தத் திட்டத்தை மருத்துவ சங்கங்களும் பயனீட்டாளர் அமைப்புக்களும் கடுமையாக குறை கூறியுள்ளன. அந்தத் திட்டம் நிலைத்திருப்பதற்கு தங்களது குடும்ப வருமானத்தில் 10 விழுக்காட்டைச் செலுத்துமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதில் அரசாங்கமும் முதலாளிகலும் செலுத்தும் சந்தாத் தொகையும் அடங்கும்.

1951ம் ஆண்டு ஊழியர் சேம நிதிச் சட்டத்தின் மூலமும் 1969ம் ஆண்டு சொக்சோ என்ற சமூகப் பாதுகாப்புத் திட்டம் மூலமும் ஊழியர்களுடைய வருமானத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக லியூ கூறினார்.

TAGS: