நஜிப்பின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்துள்ளன (விரிவாக)

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியுள்ளது. சுயேச்சையாக கருத்துக் கணிப்புக்களை நடத்தும் மெர்தேகா மய்யம் அதனைத் தெரிவித்துள்ளது.

அண்மையில் எரிபொருள், மின்சார விலைகள் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதும் அதனால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளது பற்றி மக்கள் கவலை அடையத் தொடங்கியுள்ளதும் அதற்குக் காரணங்கள் என மெர்தேகா மய்யம் கருதுகிறது.

பெர்சே 2.0 பேரணியை அரசாங்கம் எதிர்கொண்ட விதமும் சில ‘பாதகமான’ தோற்றங்களைத் தந்து விட்டன என்பதையும் அதனாலும் பிரதமருக்கான ஆதரவு சரிந்திருக்கிறது என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு மய்யம் ஒப்புக் கொண்டது.

அந்த 59 விழுக்காடு என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்குப் பதிவாகியுள்ள குறைவான ஆதரவாகும்.

2010ம் ஆண்டு ஜுன் மாதம் அவரது செல்வாக்கு விகிதம் 72 விழுக்காடாக இருந்தது.  அதே வேளையில் பிரதமர் குறித்து திருப்தி அடையாதவர் எண்ணிக்கை தொடர்ந்து 27 விழுக்காடாக இருந்து வருகிறது.

ஜுலை 9ம் தேதி பேரணிக்குப் பின்னர் ஒரு மாதம் கழித்து தேர்தல் சீர்திருத்தம் மீது நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட வேளையில் ஆகஸ்ட் 11ம் தேதிக்கும் ஆகஸ்ட் 27ம் தேதிக்கும் இடையில் அந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

3 புள்ளிகள் குறைந்தன

அந்தக் கருத்துக் கணிப்பின் போது மொத்தம் 1,027 பேர் பேட்டி காணப்பட்டனர். அவர்களில் 51 விழுக்காட்டினர் நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கருதினர். ஆனால் அது முந்திய கருத்துக் கணிப்பில் பதிவானதை விட மூன்று புள்ளிகள் சரிவாகும்.

இன ரீதியாகப் பார்க்கும் போது நஜிப்புக்கு ஆதரவு மலாய்க்காரர்களிடையே நான்கு புள்ளிகள் ( 73  விழுக்காட்டிலிருந்து) சரிந்துள்ளது. அதே வேளையில் சீனர்கள் ஆதரவு 11 புள்ளிகள் சரிந்து 38 விழுக்காடாகியது.

நாடு சரியான பாதையில் செல்கிறது என்பதை அண்மைய கருத்துக்கணிப்பில் இந்தியர்களில் 39 விழுக்காட்டினர் மட்டுமே ஒப்புக் கொண்டனர் (முந்திய விகிதம் 54 விழுக்காடு). அதே சமயத்தில் நஜிப்புக்கு 67 விழுக்காடாக இருந்த  அவர்களது ஆதரவு இரண்டு விழுக்காடு கூடியுள்ளது.

அந்தக் கருத்துக் கணிப்பு அடிப்படையில் பார்க்கும் போது பேட்டி காணப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வருவது பற்றி அதிகக் கவலை கொண்டுள்ளனர். அந்தக் கவலை எல்லா இனங்களிலும் காணப்படுகிறது.

அரசாங்க உருமாற்றத் திட்டத்தின் கீழ் வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பை சமாளிப்பதற்கான முயற்சிகள் ஏழாவது தேசிய முக்கியத்துவம் கொண்ட பகுதியாக அறிமுகம் செய்யப்படும் என ஜுலை 27ம் தேதி நஜிப் அறிவித்தார். ஆனால் அது மக்களுடைய கவலையைச் சாந்தப்படுத்தியதாகத் தெரியவில்லை.

TAGS: