பாஸ் கட்சியின் 2 மூத்த தலைவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவர்

பாஸ் கட்சியின் அடிநிலைத் தலைவர்களுடைய ஆதரவு வலுவாக இருப்பதால் அந்தக் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டும் தலைவர் ஹாடி அவாங்-கும் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடும்.

ஏற்கனவே தாம் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்துள்ள ஹாடி, தேர்தலுக்கு கட்சியை ஆயத்தம் செய்வதில் கவனம் செலுத்தவே தாம் விரும்புவதாக இன்றும் கூறினார். ஆனால் இறுதி முடிவு கட்சியைச் சார்ந்துள்ளது என்றார் அவர்.

“நான் 30 ஆண்டுகளுக்கு மேல் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராக 10 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் பணியாற்றியுள்ளேன். இந்த முறை நான் கட்சி மீது அதிகக் கவனம் செலுத்த முடியும் என நான் நம்புகிறேன்,” என்றார் ஹாடி.

கோலாலம்பூரில் இன்று பாஸ் மத்தியக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவருக்கு அருகில் இருந்த பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி, “ஆனால் நாங்கள் அது நிகழ விட மாட்டோம். அதுதான் கட்சி முடிவு,” என்றார்.

அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டதாக கட்சித் துணைத் தலைவர் முகமட் சாபு புன்னகை செய்தார்.

பாஸ் இப்போது தேர்தல் ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதாகவும் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் இன்று அறிவித்தது.

என்றாலும் கடந்த காலத்தில் தேர்தலின் போது கட்சியை வழி நடத்தியுள்ள இரண்டு உயர் தலைவர்களுடைய நிலை குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

நிக் அஜிஸுக்கு ஆதரவு கூடுகிறது

நிக் அஜிஸுக்கு கிளந்தான் பாஸ் கட்சியிடமிருந்தும் மக்களிடமிருந்தும் ஆதரவு வலுவடைந்து வருவதாக ஹாடி சொன்னார்.

தாம் ஒய்வு பெற விரும்புவதாக நிக் அஜிஸ் பல முறை கூறியுள்ளார். என்றாலும் அதற்கு பாஸ் கட்சியிலிருந்தும் வெளியிலிருந்தும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிக் அஜிஸுக்குப்  பதில் பொறுப்பேற்பதற்கு தகுதியான வேட்பாளர் இல்லை எனக் கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார்.

“அது உண்மை அல்ல. நிக் அஜிஸுக்கு பல ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உதவி செய்கின்றனர். அவர்கள் மாநில அரசில் இன்னும் பதவி வகித்து வருகின்றனர்.”

“பல ஆண்டுகளுக்குப் பின்னர் தகுதியான வேட்பாளர் இல்லை எனக் கூற முடியாது,” என்றார் ஹாடி.

TAGS: