புக்கிட் கெப்போங்:மலாய் நாளேடுகள் மாட் சாபுவை வருத்தெடுக்கின்றன

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, புக்கிட் கெப்போங் சம்பவத்தில் கம்முனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை வீரர்களாகக் காண்பிக்கப் பார்க்கிறார் என்று சொல்லி  மலாய் நாளேடுகள் அவரை வன்மையாகக் கண்டித்துள்ளன.

மாட் சாபு என்ற பெயரில்  பிரபலமாக விளங்கும் முகம்மட் சாபு, ஆகஸ்ட் 21-இல் பினாங்கு தாசேக் குளுகோரில் ஆற்றிய உரைதான் இச்சர்ச்சைக்குக் காரணமாகும். அவரது உரையின் வீடியோ வடிவத்தை அம்னோ ஆதரவு வலைப்பதிவர் ஒருவர் இணையத்தில் பதிவேற்றம் செய்ய அதை உத்துசான் மலேசியா நேற்று செய்தியாக வெளியிட்டிருந்தது.

“மெர்டேகா வந்துவிட்டால் புக்கிட் கெப்போங் பற்றிய (தொலைக்காட்சி) நிகழ்ச்சி ஒளியேறும். புக்கிட் கெப்போங்கில் மாண்ட போலீஸ்காரர்கள் பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள்”, என்றவர் அந்த வீடியோவில் கூறுகிறார்..

“புக்கிட் கெப்போங் மீது தாக்குதல் நடத்தியவர்கள்தான் சுதந்திரத்துக்காக போராடியவர்கள். புக்கிட் கெப்போங்கைத் தாக்கியவர்களில் ஒருவர் மாட் இந்திரா(முகம்மட் இந்திரா).அவர் ஒரு மலாய்க்காரர். ஆனால் அது வரலாற்று நூலில் இடம்பெறவில்லை.

“ஜின்ஸ் சம்சுடின் ஒரு படம் தயாரித்தார். அந்த புக்கிட் கெப்போங் படம் தாக்குதல்காரர்களை வில்லன்களாகச் சித்திரித்திருந்தது.

“போலீஸ் பிரிட்டிஷ் போலீஸ். சுதந்திரத்துக்குமுன் நாட்டை ஆண்டவர்கள் பிரிட்டிஷார். ஆனால் அப்படத்தில் கதாநாயகர்கள் பிரிட்டிஷ்காரர்கள்; மற்றவர்கள்(தாக்குதல் நடத்தியவர்கள்) பயங்கரவாதிகள்”, என்று மாட் குறிப்பிட்டார்.

அவரது உரையின் இன்னொரு பகுதியில்,  மெர்டேகாவை சுயபுராணம் பாடும் நாளாக அம்னோ மாற்றிக் கொண்டிருப்பதாகவும் அம்னோவுக்கு அப்பாற்பட்டவர்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக செய்துள்ள பங்களிப்பை அது புறந்தள்ளி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

மாட் சாபு உரை தொடர்பான சர்ச்சை இன்றைய உத்துசான் மலேசியாவில் நான்கு பக்கங்களை அடைத்துக் கொண்டிருக்கிறது.  

மாட் சாபு, தம் பேச்சை நினைவுகூற முடியவில்லை என்றும் வீடியோவைப் பார்த்துத்தான் அது பற்றிக் கருத்துரைக்க முடியுமென்றும் கூறியதாக பாஸுக்குச் சொந்தமான ஹராகா இணையத் தளம் கூறியிருந்தது. 

உத்துசானில் 1950 புக்கிட் கெப்போங் சம்பவத்தில் தப்பிப்பிழைத்தவர்களின் கருத்துகளும் இடம்பெற்றிருந்தன.அவர்கள் மாட் சாபுவை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ்த் தடுத்து வைக்க வேண்டும் என்றனர்.

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்(ஐஜிபி) மூசா ஹசான், மாட் சாபுவை ஒரு “துரோகி” என்றும் “பயங்கரவாதி” என்றும் அழைத்து அவரை  உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்த் தடுத்து வைக்க ஆதரவும் தெரிவித்துக் கொண்டார் என்று உத்துசான் கூறியிருந்தது. 

இதனிடையே சினார் ஹராபான், தாசேக் குளுகோரில் மாட் சாபு ஆற்றிய உரைக்காக அவர்மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது.

மாட் சாபுவின் பேச்சுக்கு எதிராக நிறைய போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக துணை ஐஜிபி காலிட் அபு பக்காரை மேற்கோள்காட்டி அது கூறியது.

“விஷமத்தனமான பேச்சுக்காக போலீசார் அவரை விசாரணை செய்வர்”, என்றாரவர்.

வரலாற்றாசிரியர்கள் பலர், மாட் சாபு வரலாற்றையே திரித்துக் கூறுகிறார் என்று குறைகூறியுள்ளதாகவும் சினார் ஹரியான் கூறியது.

TAGS: