இஸ்ரேல் விவகாரத்தில் “இரட்டை முகம்”காட்டும் அன்வாரைச் சாடுகிறார் நஜிப்

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,பாலஸ்தீன-இஸ்ரேலிய விவகாரம் குறித்து வெவ்வேறு கூட்டங்களில் வெவ்வேறு விதமாக பேசி வருவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  சாடினார்.

“ஒரு நிலைப்பாட்டைக் கொண்டால் அதில் உறுதியாக நிற்க வேண்டும். நீங்கள் பாச்சோக்கில் பேசினாலும் தாமான் துன்னில் பேசினாலும் அது உலகம் முழுவதும் தெரிந்துவிடும்”.இன்று காலை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் பன்னாட்டுக் கட்டுமான வாரத்தைத் தொடக்கிவைத்தபின்னர் நஜிப், செய்தியாளர்களிடம் பேசினார்.

நேற்று, பாச்சோக் எம்பி, பாஸ் கட்சியைச் சேர்ந்த நஷாருடின் மாட் இசா(இடம்) அண்மையில் அன்வார் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பில் அக்கறைக் காட்டிப் பேசியதை அறிந்து பாலஸ்தீனிய பிரதமர் இஸ்மாயில் ஹனியா ஏமாற்றம் அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டது பற்றி செய்தியாளர்கள் நஜிப்பின் கருத்தை அறிய விரும்பினர்.

ஆங்கில நாளேடான நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சில் வெளிவந்துள்ள செய்தியின்படி அந்த முன்னாள் பாஸ் துணைத் தலைவர் அண்மையில் குவைத் சென்றபோது அல்-குட்ஸ் மலேசியா அறநிறுவன நிர்வாக வாரியத் தலைவர் என்ற முறையில் அவர் ஹனியாவைச் சந்தித்திருக்கிறார்.

“ஹமாஸின் மற்ற அதிகாரிகளும் அதே உணர்வைத்தான் வெளிப்படுத்தினார்கள்.அன்வார் ஏன் அப்படிப் பேசினார் என்றவர்கள் வினவினர்.அது 1988-இல், இஸ்ரேலின் இருப்பை அங்கீகரிக்கும் ஒரு செயல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று 66 முப்திகள் வெளியிட்டுள்ள ஃபாட்வாவை மீறும் செயலாகும் என்றவர்கள் குறிப்பிட்டனர்”, என்று நஷாருடின் தெரிவித்ததாக அச்செய்தி கூறியது.

அன்வார் வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் “இஸ்ரேலின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளையும்” ஆதரிப்பதாகக் கூறினார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்வாரின் கூற்று பாலஸ்தீனத்துக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிகிறது என்று நஜிப் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால், மலேசிய அரசு அன்வாரின் கருத்தைப் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதை நஜிப் தெளிவுப்படுத்தினார்.

“ஹாமாஸுக்கும் பாலஸ்தீன விடுதலை முன்னணி(பிஎல்ஓ)க்கும் நம் நிலைப்பாடு தெரியும். பாலஸ்தீனியர் போராட்டத்துக்கு மலேசியா மிகுந்த ஆதரவு தெரிவித்து வந்திருப்பதை அவர்கள் அறிவர்…..

“நம் கொள்கை நிலையானது.இங்கு சொன்னதைத்தான் பன்னாட்டு ஊடகங்களிடமும் சொல்வேன்”, என்றாரவர்.

வால் ஸ்திரிட் ஜர்னலிடம் திருத்தம் வெளியிடுமாறு கோரிக்கை விட வேண்டும் அல்லது தாம் சொன்னதைத் திரித்துக்கூறியதற்காக அதன்மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று பாஸ் அன்வாருக்கு “இறுதி எச்சரிக்கை” விடுத்திருப்பதையும் நஜிப் சுட்டிக்காட்டினார்.

TAGS: