இந்தியர்களின் பிரச்னைகளை பேரரசரிடம் நேரில் தெரிவிக்க இண்ட்ராப் விருப்பம்

“மலேசியாவின் வளப்பத்திற்கு இந்தியர்கள் ஆற்றிய பங்கையும், அவர்கள் இன்று அனுபவிக்கும் சமூக, பொருளாதார அவலங்களையும், கேட்பாரற்று இருக்கும் நிலைமைகளையும் தெளிவாக” விவரித்து ஐந்து பக்க மகஜர் ஒன்றை இண்ட்ராப் நேற்று பேரரசரிடம் தாக்கல் செய்தது.

பேரரசரின் அந்தரங்கச் செயலாளரின் தனிச்செயலாளர் புவான் ஜைனாப்பிடம் அந்த மகஜரை நேற்று காலை மணி 11.30 க்கு இண்ட்ராப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் வழங்கினர் என்று மக்கள் சக்தியின் ஊடகத் தொடர்பாளர்   க. சந்திரமோகன் கூறினார்.

இன்று தேசிய அரண்மனையில் மகஜர் வழங்கிய இண்ட்ராப் குழுவில் ந.கணேசன், வி.சம்புலிங்கம், க.தமிழ்செல்வம், க.சந்திரமோகன் மற்றும் சாந்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பேரரசரிடம் வழங்கப்பட்ட அந்த மகஜரில் இந்தியர்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கும் “இண்ட்ராப் அமைப்பைச் சட்ட ரீதியாக அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் மாமன்னர் அரசை கேட்டுக்கொள்ள வேண்டும்” என்றும் “இந்தியர்களின் குறைபாடுகளை மாமன்னரிடம் நேரிடையாக விவரிக்கும் வகையில் அவரை சந்திக்க விருப்பம் கொண்டுள்ளதையும்” தெரிவித்திருப்பதாக கணேசன் கூறினார்.

மகஜரை பெற்றுக்கொண்ட புவான் ஜைனாப் இண்ட்ராப்பின் கோரிக்கைகளை தாம் நிச்சயம் மாமன்னரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக வாக்களித்தார் என்று கூறிய கணேசன், அரண்மனையிடமிருந்து தங்களுக்குச் சாதகமான பதில் விரைவில் கிட்டும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.