இஸ்ரேலிய விவகாரம் மீது பகிரங்கமாகப் பேசுங்கள் என அன்வாருக்கு அறிவுரை

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் மீது விடுத்த சர்ச்சைக்குரிய அறிக்கை பகிரங்கமாகி விட்டதால் அந்த விவகாரத்தை அவர் “வெளிப்படையாக” விளக்க வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் விரும்புகிறார்.

இவ்வாறு அவரை மேற்கோள் காட்டி மலாய் மொழி நாளேடான உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

“அன்வார் என்னைப் பார்க்க விரும்பினால் அதில் ஒன்றுமில்லை. உண்மையாக இருக்கின்ற எதற்கும் அஞ்சாத யாரையும் நாங்கள் ஆதரிப்போம்,” அந்த கிளந்தான் மந்திரி புசார் கூறினார்.

“அவர் அறிக்கைகளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அதற்கு நான் தனிப்பட்ட முறையில் பதில் பெற விரும்புவது சரியல்ல.”

“அந்த விவகாரம் பகிரங்கமாகி விட்டது. அதற்கான பதில் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும். அப்போது தான் மக்களுக்கும் தெரிய வரும்,” என நிக் அஜிஸ் தமது அதிகாரத்துவ இல்லத்தில் நிருபர்களிடம் கூறினார்.

ஏசியன் வால் ஸ்டீரிட் சஞ்சிகை தான் வெளியிட்ட அறிக்கையை மீட்டுக் கொண்டு அந்தத் தகவல் மீது விளக்கமளிக்க வேண்டும் என அன்வார் கோர வேண்டும் அல்லது தமது அறிக்கையை ‘திரித்ததற்காக’ அந்த அனைத்துலக சஞ்சிகை மீது அன்வார் வழக்குப் போட வேண்டும் என அன்வாருக்கு ஏற்கனவே நிக் அஜிஸ் கெடு விதித்துள்ளார்.

“அன்வார் அந்த அறிக்கையை மீட்டுக் கொள்ள விரும்பா விட்டாலும் சரி தான். அது முதலாவதாக இருக்கட்டும். நாம் அதனைப் பின்னர் கவனித்துக் கொள்வோம்,” எனக் கூறிய நிக் அஜிஸ்,

அன்வாருக்கு விளக்கம் கோரி கடந்த திங்கட்கிழமை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

“இஸ்ரேலியப் பாதுகாப்புக்கான எல்லா முயற்சிகளையும்” தாம் ஆதரிப்பதாக ஏசியன் வால் ஸ்டீரிட் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் அன்வார் சொன்னதாகக் கூறப்படுகிறது.

“சட்ட விரோத” இஸ்ரேலிய நாட்டை பாஸ் அங்கீகரிக்கவில்லை என்றும் பாலஸ்தீனர்களுக்கும் ஒரு நாடும் யூதர்களுக்கு ஒரு நாடும் என இரண்டு நாடுகள் இருக்க அனுமதிக்கும் தீர்மானத்தையும் பாஸ் நிராகரிக்கிறது என்றும் நிக் அஜிஸ் வலியுறுத்தினார்.

TAGS: