அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், பதவியை நேசிப்பதைவிட கட்சியை அதிகம் நேசிக்க வேண்டும் என்கிறார் முன்னாள் அம்னோ தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
இன்று செர்டாங்கில், பெர்டானா பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர்,“அவர் கட்சிக்கு ஏற்படும் பாதிப்பை எண்ணிப்பார்க்க வேண்டும். பதவிமீது அதிகம் ஆசை வைக்கக் கூடாது”, என்றார்.
தலைவராக இருப்பவர் எப்போது பதவி விலக வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட மகாதிர் தாமே அதற்கு ஓர் எடுக்காட்டு என்றார். 22 ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர் சுயவிருப்பத்தின்பேரில் அதிலிருந்து விலகியதாக அவர் குறிப்பிட்டார்.
நீண்டகாலம் பதவியில் இருந்த பின்னர், மக்களுக்கு அது பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் விலகிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
“இனி, முடிவு செய்ய வேண்டியது அவர்தான்”, என்றாரவர்.
நேசனல் ஃபீட்லோட் கார்பரேசனுக்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட ரிம250மில்லியன் தவறான முறையில் செலவிடப்பட்டதாக ஷாரிசாட் குடும்பத்தார்மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் ஏற்கனவே கேட்டுக்கொண்டது பற்றிக் கருத்துரைத்தபோது மகாதிர் இவ்வாறு கூறினார்.
மாடுவளர்ப்புக்காகக் கொடுக்கப்பட்ட கடன்தொகை கொண்டோமினியம்கள் வாங்கவும் ஆடம்பர கார்கள் வாங்கவும் விடுமுறை செல்லவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஷாரிசாட்டும் அவரின் குடும்பத்தாரும் தவறு எதுவும் நிகழவில்லை என்று வாதிட்டு வருகிறார்கள்.
விவகாரம் இப்போது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மற்றும் போலீசின் விசாரணையில் உள்ளது.