மணல் திருட்டு: பொது விசாரணை தேவை என்கிறார் நோ ஒமார்

சிலாங்கூர் மாநிலத்தில் நிகழ்வதாகக் கூறப்படும் மணல் ஊழல் குறித்து பொது விசாரணை நடத்த மாநில அரசாங்கம் ஒப்புக் கொள்ளுமானால் அதற்கான ஆவணங்களையும் சாட்சிகளையும் வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார் கூறுகிறார்.

அந்த விசாரணை செல்காட் என்ற திறமை, பொறுப்பு, வெளிப்படையான போக்கு மீதான சிறப்புத் தேர்வுக் குழுவின் கீழும் அந்த விசாரணை நடத்தப்படலாம் என்றார் அவர்.

மாநில அரசுக்குச் சொந்தமான Kumpulan Semesta Sdn Bhd நிறுவனம் நடத்தும் மணல் சுரங்கத் தொழிலில் முறைகேடுகளும் ஊழலும் நிகழ்வதாக சொல்லப்பட்டுவதை தாம் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் நோ ஒமார் விரும்புகிறார்.

“இப்போது மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமுக்கு அதனைச் செய்வதற்குத் துணிச்சல் உண்டா? அவர் பதவி துறப்பாரா அல்லது பொறுப்பான அதிகாரியை அல்லது ஆட்சிமன்ற உறுப்பினரை நீக்குவாரா அல்லது அந்த நிறுவனத்தை மூடுவதற்கு ஆணையிடுவாரா? ” என அந்த அமைச்சர் வினவினார்.

சிலாங்கூர் மாநில மணல் சுரங்கத் தொழிலில் ஊழலும் முறைகேடுகளும் நிகழ்வதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக சிலாங்கூ அம்னோ தொடர்புக் குழுத் துணைத் தலைவருமான நோ ஒமார் அண்மையில் கூறிக் கொண்டிருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நோ ஒமாரைப் பேட்டி காணுமாறு Kumpulan Semesta Sdn Bhd வாரியத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துலக வெளிப்படை நிறுவனத்தின் இரண்டு சுயேச்சை பேராளர்களை மாநில அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக நேற்று அப்துல் காலித் தெரிவித்திருந்தார்.

-பெர்னாமா

TAGS: