டிஏபி: கடன் வாங்குவதைச் சட்டப்பூர்வமாக்க அரசாங்கம் சட்டங்களை திருத்தியது

கடன் வாங்குவதை சட்டப்பூர்வமாக்குவதற்கு அரசாங்கம் வாங்கும் கடன்களுக்கான உச்சவரம்பை “பல முறை” உயர்த்தி விட்டதே நாட்டின் கடன் அளவு அதிகரித்து வருவதற்குக் காரணம் என டிஏபி குற்றம் சாட்டியுள்ளது.

“சட்டப்பூர்வ கடன் உச்ச வரம்பு என்பதற்கு அர்த்தமில்லாமல் போகும் வகையில் தனது விருப்பங்களுக்கு ஏற்ப அந்த உச்ச வரம்பை பல முறை அரசாங்கம் திருத்தியிருப்பதாக” அந்தக் கட்சியின் தேசிய பிரசாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா குற்றம் சாட்டியுள்ளார்.

2011/2012ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கக் கடன் 53.8 விழுக்காடாக உள்ளது அது கடன் உச்ச வரம்பான 55 விழுக்காட்டைக் காட்டிலும் குறைவாகும். ஆனால் அது அரசாங்கம் மேற்கொண்ட ‘தில்லுமுல்லு’ நடவடிக்கைகளின் விளைவே என அவர் சொன்னார்.

“பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் அரசாங்கம் வாங்கக் கூடிய “கடன் உச்ச வரம்பை ” உண்மையில் பல முறை உயர்த்தியுள்ளது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட வெகு வேகமாக வளர்ந்து வரும் கூட்டரசு அரசாங்கக் கடனை “சட்டப்பூர்வமாக்குவதே” அதன் நோக்கமாகும்.”

நடப்பு இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா-வின் உத்தரவுக்கு இணங்க நடப்பு 55 விழுக்காடு உச்ச வரம்பு 2009ம் ஆண்டு ஜுலை மாதம் அமலுக்கு வந்தது.

“திருத்தப்பட்ட அந்த வரம்புக்கு முன்னதாக 2008ம் ஆண்டு ஜுன் மாதம் அது 45 விழுக்காடாக அப்போதைய இரண்டாவது நிதி அமைச்சர் நோர் முகமட் யாக்கோப்-பினால் நிர்ணயிக்கப்பட்டது,” என புவா இன்று விடுத்த அறிக்கை கூறியது.

அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய இரண்டாவது நிதி அமைச்சர் ஜமாலுதின் ஜார்ஜிஸ் அந்த வரம்பை 40 விழுக்காடாக அதிகரித்தார் என்றும் அவர் சொன்னார்.

“ஆகவே கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் நமது கடன் உச்ச வரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 விழுக்காடு கூட்டப்பட்டுள்ளது.”

“நாம் கடன் வாங்குவதற்கு நிர்ணயிக்கப்படும் உச்ச வரம்பு பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அடிக்கடி அதனை உயர்த்திக் கொண்டு போனால் ஏன் வரம்பு என ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என்பதே இப்போதைய கேள்வி,” என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான புவா வினவினார்.

TAGS: