இந்தியாவை தலைமையகமாக கொண்டு செயல் படும் “மனித உரிமை பாதுகாப்பு (HRDI)” அமைப்பு தனது 2 ஆவது சர்வதேச பேராளர்கள் மாநாட்டை எதிர்வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் புது டில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு முறையே புது டில்லியில் அமைந்திருக்கும் ஹிந்தி பவன் மற்றும் இந்திய சட்ட நிறுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறும்.
இம்மாநாட்டை “வாழ்வியல் கலை” நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அதிகாரபூர்வமாக துவங்கி வைப்பார் என்று இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேஷ் கோக்னா அறிவித்ததாக ஹிண்ட்ராப் மக்கள் சக்தி ஊடக தொடர்பாளர் சந்திரமோகன் கூறினார்
இந்நிகழ்வில் முதல் முறையாக புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வு விவரங்கள் விவாதிக்கப்படும். இந்தியாவின் அரசுத் தலைமை (கூடுதல்) வழக்குரைஞர் A .S சந்தியோக், ஹார்வர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் பென்கின், வங்காள தேச மனித உரிமை வழக்குரைஞர் ரவீந்தர் கோஷ் ஆகிய முக்கிய பிரமுகர்களுடன் இண்ட்ராப் மக்கள் சக்தியின் தலைவர் பொ.வேதமூர்தியும் இம்மாநாட்டில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர்.
முதல் நாள் நிகழ்வில் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சமூக, பொருளாதார பிரச்சனைகளை பற்றியும் மறு நாள் மலேசிய ஆட்சி அமைப்பு முறைகுட்படுதப்பட்ட இன ரீதியான கொள்கைகளால் எவ்வாறு மலேசிய இந்தியர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் தமது வரலாற்று பூர்வ ஆய்வுகளின் அடிப்படைகளின் நிதர்சனங்களை முன்வைத்து வேதாமூர்த்தி உரை நிகழ்த்தவுள்ளார் என்று சந்திரமோகன் கூறினார்
புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த முறைபடுத்தப்பட்ட விரிவான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் அதே நேரத்தில் அந்த பிரச்சனைகளைக் கையாள்வதற்கு ஏற்கத்தக்க தீர்வுகளை இம்மாநாட்டின் வழி அடையாளங்காண்பதும் இந்நிகழ்வின் முக்கிய குறிக்கோள் ஆகும் என்று ராஜேஷ் கோக்னா மேலும் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்களாதேசம், நேப்பால், பூட்டான், இலங்கை, சிங்கபூர் மற்றும் இன்னும் பல நாடுகளில் இருந்து வழக்குரைஞர்களும், மனித உரிமை செயற்றிறனாளிகளும் ஒன்று கூடுவர் என்பது குறிப்பிட தக்கது என்று வி. சம்புலிங்கம் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.