அடையாளக் கார்டு திட்டத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (RCI) அமைக்கப்படுவது தொடர்பில் எந்த அறிவிப்பும் செய்யாமல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று சபாவிலிருந்து புறப்பட்டார். அவர், அந்த ஆணையம் அமைக்கப்படுவது மீது தமது சபா பயணத்தின் போது அறிவிப்பு செய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
அடையாளக் கார்டு திட்டம் என அழைக்கப்பட்ட- சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறப்படுவது பற்றி ஆர்சிஐ-யை அமைக்கும் யோசனையை கடந்த வாரம் அமைச்சரவை விவாதித்ததாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் டாக்டர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி அறிவித்திருந்தார்.
அந்த அரச ஆணையம் சர்ச்சைக்குரிய அந்தத் திட்டத்தை முழுமையாக ஆராய வேண்டும் என பிபிஎஸ் என்ற Parti Bersatu Sabah துணைத் தலைவரும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுத் தலைவருமான அவர் கேட்டுக் கொண்டார்.
“அது எப்படி நிகழ்ந்தது, யார் அதனைச் செய்தார்கள், அதனைச் செய்த மக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?” என ஆராய வேண்டும் என்றார் அவர்.
அந்த ஆர்சிஐ அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமைக்கப்பட வேண்டும் என்று சபாவைச் சேர்ந்த இன்னொரு அமைச்சரான பெர்னார்ட் டொம்போக் கேட்டுக் கொண்டார்.
“இல்லை என்றால் நாம் தேர்தலுக்காக அதனைச் செய்வதாக மக்கள் எண்ணத் தொடங்கி விடுவர்.”
அமைச்சரவை ஏற்கனவே முடிவு செய்து விட்டது
அந்த முடிவை அறிப்பதற்கான அதிகாரத்தை அமைச்சரவை நஜிப்புக்கு ஏற்கனவே வழங்கி விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
“கடந்த பல ஆண்டுகளாக சபா மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விசயம் இதுதான். நான் அந்த ஆர்சிஐ விசயத்தை ஏற்கனவே மூன்று முறை எழுப்பி விட்டேன். ஆனால் அது எந்த முடிவும் செய்யப்படாமல் தொங்கிக் கொண்டிருந்தது.”
“நான் அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் (பிப்ரவரி 8) அந்தப் பிரச்னையை மீண்டும் எழுப்பினேன். அப்போது அமைச்சரவை அந்த முடிவை எடுத்தது” ,என உப்கோ என்ற United Pasokmomogun Kadazandusun Murut Organisation அமைப்பின் தலைவருமான டொம்போக் தெரிவித்தார்.
ஆளும் பிஎன் -னுக்கும் எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யாட்டுக்கும் முக்கியமான மாநிலமாகத் திகழும் சபாவுக்கு நஜிப் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பயணம் மேற்கொண்டார்.
ஆனால், அவர் ஆர்சிஐ மீது எந்த அறிவிப்பையும் செய்யாமல் நேற்று பின்னேரம் சபாவிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டார்.
அதனால் எல்லா சபா தலைவர்களும் என்ன சொல்வது எனத் தெரியாமல் தலையைச் சொறிந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த விவகாரத்தை ஆராய்வதற்கு சபாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் ஒப்புக் கொள்ளவில்லை. அரச ஆணையம் அமைக்கப்படுவதை தான் எதிர்ப்பதாக சபா அம்னோ ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதனிடையே அடையாளக் கார்டு திட்டம் மீது அமைக்கப்படும் ஆர்சிஐ விசாரணை சபாவை மட்டுமின்றி நாடு முழுவதையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என பக்காத்தான் கோரியுள்ளது.
“அரசாங்கம் ஆர்சிஐ உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் அதன் பணிகள் சபாவுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படக் கூடாது. காரணம் அது தேசியப் பிரச்னை,” என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.