“எது மோசமானது என்பதை என்னால் முடிவு செய்ய முடியவில்லை- கெர்ட்டினின் அறியாமையா அல்லது அதன் பேராசையா? ஆனால் கல்வி என்பது வர்த்தகமாகி விட்ட போது கொள்கைகள் எல்லாம் காற்றில் பறந்து விடும்.”
கெர்ட்டின் ரோஸ்மாவைத் தலை மகள் எனத் தவறாகக் குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டது
பார்வையாளன்: கெர்ட்டின் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜினட் ஹாக்கெட் கவைக்கு உதவாத காரணங்களைச் சொல்லி ஏற்பட்ட சேதத்தைச் சரிக்கட்ட முயலுகிறார்.
கெர்ட்டின் பல்கலைக்கழகம் தனது கல்விச் சேவைகளை விற்பதின் மூலம் பணம் பண்ணும் வர்த்தகமாகும். எந்த ஒரு வர்த்தகத்தையும் போன்று அந்த நாட்டின் அரசியல் தலைமைத்துவத்துடன் நல்ல உறவுகளைப் பேணிப் பாதுகாக்க அதுவும் முயலுகிறது.
மலேசியாவில் மிரியில் கெர்ட்டின் பல்கலைக்கழகத்துக்கு கிளை வளாகம் ஒன்று இயங்குகிறது. அதனால் ‘கௌரவம்’, ‘பிஎச்டி’ (டாக்டர்) என்ற சொற்கள் எழுதப்பட்ட ஒரு துண்டுக் காகிதத்தை பிரதமருடைய துணைவியாருக்கு வழங்குவதின் மூலம் பிரதமரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் நல்லதொரு வர்த்தக முறையாகும்.
ஸ்கோர்ப்பியோன் நீர்மூழ்கிகளை விற்றவர்கள் மில்லியன் கணக்கில் கொடுத்ததைக் காட்டிலும் இது விஐபி-க்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு எவ்வளவோ மலிவான வழியாகும்.
எதிர்காலத்தில் கெர்ட்டின் இன்னும் அதிகமான கிளைகளைத் திறந்து பணம் பண்ண முடிவு செய்தால் அனைத்து அரசாங்க அனுமதிகளும் விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்ய அது பிரதமரையும் செல்வாக்குமிக்க அவரது துணைவியாரையும் நம்பியிருந்தால் போதும்.
கிளாவ்ட்னைன்: கெர்ட்டின் தனது மதிப்பீட்டில் கவனக் குறைவாகவும் அலட்சியமாகவும் நடந்து கொண்டுள்ளது. மதிப்பீடு ஏதும் செய்யப்பட்டிருந்தால் அது முறையாக செய்யப்படவில்லை.
எனக்கு ஆஸ்திரேலியர்களை நன்கு தெரியும். அவர்கள் உண்மையை உண்மை என்றுதான் சொல்வார்கள். அவர்கள் எதனையும் செய்வதற்கு முன்னர் தீவிரமாக ஆராய்வர். ஆகவே துணை வேந்தர் ஹாக்கெட் அவர்களே, அந்த விருது வழங்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம் என்ன?
அந்த விவகாரத்தை முழுமையாக ஆராய அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன்.
கலா: கெர்ட்டின் தனது நல்ல பெயரைத் தானே கெடுத்துக் கொண்டு விட்டது. ரோஸ்மாவுக்கு பிஎச்டி பட்டத்தை கெர்ட்டின் வழங்கியது உண்மையில் என் மூளையை குழப்புகிறது.
எண்ணிக்கை அடிப்படையில் 600 பெர்மாத்தா மையங்களை அமைத்ததின் மூலம் ரோஸ்மா சாதனை புரிந்திருக்கலாம். பிரதமராக நஜிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள் அவரது துணைவியார் நடத்தும் அந்த மையங்கள் குறிப்பிட்ட இலக்கை அடைந்து விட்டனவா என்பது கெர்ட்டினுக்கு உறுதியாகத் தெரியுமா?
இரண்டாவதாக, இது தார்மீகம் சம்பந்தப்பட்டதாகும். சி4 வழக்கில் அவரது பங்கு குறித்து மலேசியர்களிடையே பொதுவாக சந்தேகம் எழுந்துள்ளது. அதன் தொடர்பில் அவரை அதிலிருந்து விடுவிப்பதற்கான எந்த ஒரு மறுமொழியையும் இது வரை அதிகார வர்க்கம் வழங்கவில்லை.
அது குறித்து விவரங்கள் கிடைக்காத வேளையில் கெர்ட்டின் அந்த விருதை அவருக்கு வழங்கியிருப்பது அதனுடைய கவனக் குறைவைக் காட்டுகிறது. சிறந்த உயர் கல்விக் கூடம் என்னும் அதன் தோற்றம் மீது துரதிர்ஷ்டவசமாக களங்கம் ஏற்பட்டுள்ளது.
ஹோல்டன்: ரோஸ்மா அந்த விருதுக்குத் தகுதியானவர் தானா என்பதை ஆய்வு செய்வதில் கெர்ட்டின் அவ்வளவு பலவீனமாக உள்ளதா? இந்த நாட்டில் கல்வி சம்பந்தப்பட்ட வரையில் அரை டஜனுக்கு மேற்பட்ட பெண்கள் என் நினைவுக்கு வருகின்றனர்.
ஆனால் அவர்கள் எந்த ஒரு பிரதமரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாட்டின் கருவூலத்திலிருந்து கிடைக்கும் வளங்களும் அவர்களிடம் இல்லை.
எது மோசமானது என்பதை என்னால் முடிவு செய்ய முடியவில்லை- கெர்ட்டினின் அறியாமையா அல்லது அதன் பேராசையா? ஆனால் கல்வி என்பது வர்த்தகமாகி விட்ட போது கொள்கைகள் எல்லாம் காற்றில் பறந்து விடும். இல்லையா, ஹாக்கெட் அவர்களே.
அபாஸிர்: 86 வயதான அன்னை மங்களம் தனது வாழ் நாள் முழுமையும் வசதி குறைந்த, சிதறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் அனாதைகளுக்கும் இன வேறுபாடின்றி ஆதரவு கொடுத்து வருகிறார்.
இரண்டாம் உலகப் போர், கம்யூனிஸ்ட் கிளர்ச்சி ஆகிய துயரங்களிலிருந்து நாடு விடுபட்டு வரும் வேளையில் அவர் தமது 20வது வயதில் அந்தச் சேவையைத் தொடங்கினார். அவரது அயராத முயற்சிகளின் விளைவாக ஆயிரக்கணக்கான பிள்ளைகள் சாதாரண வாழ்க்கையை ஆனால் அர்த்தமுள்ள வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
ஆனால் கெர்ட்டின் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில் அவருக்கு மிக நல்ல காரணத்துக்காக தகுதி இல்லை: அந்தப் பல்கலைக்கழகத்துக்கு எந்த சலுகையையும் வழங்கும் ஆற்றல் அவருக்கு இல்லை.
கெர்ட்டின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தாரக மந்திரமான” நான் உங்களுக்கு உதவுகிறேன், நீங்கள் எனக்கு உதவுங்கள்” என்னும் கோட்பாட்டை முழுமையாக ஒப்புக் கொள்வது இப்போது எங்களுக்குத் தெரிந்து விட்டது. அந்த கல்வித் தொழில் நிறுவனத்தின் சுலோகமாக அது இனிமேல் இருக்க வேண்டும்.
அப்டுயூ: எனக்கு அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை. கெர்ட்டின் போன்ற புகழ்பெற்ற ஆஸ்திரேலிய பல்கலைக் கழகம் மிகவும் தாழ்ந்து போய் ‘bodek’ செய்துள்ளது. அதன் வர்த்தகம் நலிந்திருக்க வேண்டும் அல்லது கடுமையாக இருக்க வேண்டும்.