“மலேசிய சீனர்கள் அரசியல் திருப்பு முனையில்” என்னும் தலைப்பிலான மாநாட்டை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் தொடக்கி வைத்துள்ளார்.
தமது தொடக்க உரையில் அவர் பக்காத்தான் ராக்யாட்டை முழுமூச்சாகத் தாக்கிப் பேசினார்.
இன்று மாலை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-குடன் அவர் நடத்தும் சொற்போருக்கு அந்தத் தாக்குதல்கள் கட்டியம் கூறின.
அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் அமைக்குமானால் பாஸ் கட்சியின் இஸ்லாமிய நோக்கம் காரணமாக கூட்டரசு அரசமைப்பு ‘குழப்பத்துக்கு’ இலக்காகும் என சுவா தமது உரையில் குறிப்பிட்டார்.
ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதில் பாஸ் கட்சி “முனைப்பாக” உள்ளது என வாதாடிய அவர் அந்தச் சட்டம் மலேசிய அரசமைப்பில் குறிக்கப்பட்டுள்ள சட்ட, நீதி முறைகளுக்கு மருட்டலை ஏற்படுத்தும் என்றார்.
“ஹுடுட் நோக்கம் கொண்ட மாநிலங்கள் புரிந்துள்ள சாதனைகள் என்ன என்பதை மலேசியர்கள் ஆராய வேண்டும். ஆளுமை அடிப்படையில் அவை எந்த அளவுக்கு பயனளித்துள்ளன?
“அவை ஊழல் அளவைக் குறைத்துள்ளனவா? ஹுடுட் சட்டத்தைப் பின்பற்றும் பெரும்பாலான நாடுகளில் ஊழல் மலிந்துள்ளன. அவை அதிகார அத்துமீறல்களை முறியடித்துள்ளனவா? ஹுடுட் மாநிலங்கல் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் திறமையில் உயர்ந்தவையா?
பக்காத்தான் கீழ் ஹுடுட் உண்மையானது
ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதில் கிளந்தான் மாநிலத்தைப் பின்பற்றப் போவதாக பாஸ் வழி நடத்தும் கெடா அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளதை சுவா சுட்டிக் காட்டினார்.
“பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமும் ஹுடுட் சட்டம் மீது தமக்கு உள்ள கடப்பாட்டை “மிகவும் சத்தம் போடாமல்” தெரிவித்துக் கொண்டுள்ளார்.”
“பக்காத்தான் ஆட்சியிப் ஹுடுட் உண்மையாகக் கூடிய அபாயம் இருக்கும் போது டிஏபி, பாஸ் கட்சியின் திட்டத்தை தடுத்து விடும் என சிலர் கருத்துக் கூறுகின்றனர்,” என்றார் சுவா.
‘டிஏபி இன ரீதியில் இயங்குகிறது’
பாஸ் கட்சி மகளிர் உரிமைகளை மறுக்கிறது, ஆண்-பெண் கலந்துரையாடலை நிராகரிக்கிறது, பொழுதுபோக்கு மய்யங்களுக்கு பொது மக்கள் செல்வதை தடுக்கிறது, பண்பாட்டுச் சுதந்திரத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை எனக் கூறிய மசீச தலைவர், பிஎன் அணுகுமுறை அதற்கு ‘நேர்மாறானது’ என்றார்.
ஹுடுட் சட்டத்தை சுவா தாக்கிப் பேசியதை அந்த மாநாட்டில் முக்கிய உரையாற்றவிருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் செவிமடுத்துக் கொண்டிருந்தார்.
இதனிடையே டிஏபி ‘இன ரீதியாக இயங்குகிறது’ என்றும் சுவா கூறிக் கொண்டார். அதனால் அதற்கு ‘தலைக்கனம்’ அதிகரித்து விட்டது என்றார் அவர்.
“டிஏபி தனது பிரச்சாரத்தின் போது குறிப்பாக சீனர்கள் கூட்டத்தில் பினாங்கு மாநில அரசாங்கத்தை அமைப்பதில் தாங்கள் அடைந்துள்ள வெற்றியைப் பற்றியும் டிஏபி தலைவர் ஒருவர் அதன் முதலமைச்சராக இருப்பதைப் பற்றியும் பேசுகிறது.”
“இது மற்ற மாநிலங்களிலும் சாத்தியம் என்ற தவறான நம்பிக்கையை சீனர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமாக பினாங்கில் மட்டுமே அது சாத்தியம். மற்ற மாநிலங்களில் அது முடியாது.”
“எனவே சீனர் தலைமையிலான அரசாங்கம் சாத்தியம் என கிட்டத்தட்ட 6.5 மில்லியனாக இருக்கும் சீனர்களிடம் பொய்யான நம்பிக்கையை விதைத்து வருகிறது. மசீச மலேசிய சீனர்களை ஏமாற்றி வருகிறது என்றும் டிஏபி கூறுகிறது,” என்றார் சுவா.
எடுத்துக் காட்டுக்கு பேராக்கில் குறுகிய காலத்திற்கு ஆட்சி புரிந்த பக்காத்தான் அரசாங்கத்தை சுவா சுட்டிக் காட்டினார். அதிகமான இடங்களை டிஏபி வென்ற போதிலும் மந்திரி புசார் பதவி குறைந்த இடங்களை வைத்திருந்த பாஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டது.
இப்போது ஜோகூரில் மந்திரி புசார் பதவியை பாஸ் வேட்பாளருக்கு வழங்கும் யோசனையையும் ஏற்றுக் கொள்ள டிஏபி தயாராக இருப்பதையும் சுவா சுட்டிக் காட்டினார்.
“சுருக்கமாகச் சொன்னால் டிஏபி-க்கு செலுத்தப்படும் வாக்கு பாஸ், பிகேஆர்-க்கு போடப்படும் வாக்கு ஆகும். காரணம் பக்காத்தானில் அவை தோழமைக் கட்சிகளாகும். டிஏபி-க்கு வலிமை கொடுக்கப்பட்டால் அது பாஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கு ஒப்பாகும். மாநிலங்களிலும் கூட்டரசு அரசாங்கத்திலும் பெரிய சகோதரர் நிலைக்கு (taiko) பாஸ் உயர்த்தப்படும்,” என்றார் அவர்.
அந்த மாநாட்டில் இன்று நான்கு தலைப்புக்களில் விவாதம் நடத்தப்படும். ஒவ்வொரு விவாதத்திலும் ஒரு டிஏபி தலைவர் ஐந்து மூத்த சீன பிஎன் தலைவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
விவாதங்களின் இறுதியில் சுவா-லிம் சொற்போர் நிகழும். அது நேரடியாக தொலைக்காட்சியில் அஞ்சல் செய்யப்படும்.
அஸ்லி எனப்படும் ஆசிய வியூக தலைமைத்துவக் கழகமும் மசீச-வின் இன்சாப் என்ற வியூக ஆய்வு, கொள்கை ஆய்வு மய்யமும் அந்த நிகழ்வைக் கூட்டாக நடத்துகின்றன