உலக மக்களின் தாய்மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றை மாணவர்களின் முதல் போதனை மொழியாக பயன்படுத்தப்படுவதற்கும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு தாய்மொழி அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் ஐக்கிய நாட்டு மன்றம் பெப்ரவரி 21 ஆம் தேதியை அனைத்துலக தாய்மொழி தினம் என்று அறிவித்தது.
உலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து தாய்மொழிகளையும் அழிவிலிருந்து காப்பாற்றி அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமையை ஐநா அதன் உறுப்பிய நாடுகளிடம் அளித்துள்ளது. அந்நாடுகளில் மலேசியாவும் அடங்கும்.
மலேசிய அரசாங்கம் அனைத்துலக தாய்மொழி தினம் பற்றி அக்கறை காட்டவில்லை. ஆனால், தாய்மொழியின் முக்கியத்துவம், அதன் பாதுகாப்பு மற்றும் அதன் பயன் ஆகியவற்றில் அக்கறை கொண்டுள்ள அரசு சார்பற்ற அமைப்புகள் அனைத்துலக தாய்மொழி தினத்தை கொண்டாடி அதனை நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பெப்ரவரி 21, 2012 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் அனைத்துலக தாய்மொழி தினம் சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது.
இந்நாட்டு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழ் அறவாரியம் இதர அமைப்புகளான லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையம் (எல்எல்ஜி), கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபம் மற்றும் இதர அமைப்புகளுடன் கூட்டாக இணைந்து இவ்வாண்டு அனைத்துலக தாய்மொழி தினம் கொண்டாடப்படும் என்று தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அச்செய்தியாளர் கூட்டத்தில் பசுபதியுடன் எல்எல்ஜி மற்றும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முறையே இங் யாப் ஹவா, யவ் லீ பங் மற்றும் ஜீன் லீயும் உடனிருந்தனர்.
அவர்களுடன் சுவாராம் என்ற மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகமும் அச்சந்திப்பில் பங்கேற்றார்.
தாய்மொழியில் கல்வி, குறிப்பாக கணிதமும் அறிவியலும், போதிக்க வேண்டியதின் கட்டாயத்தை வலியுறுத்திய பசுபதி, முன்னதாக சீன மற்றும் மலாய் அமைப்புகளுடன் இணைந்து கணிதமும் அறிவியலும் தாய்மொழியில் போதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்தார்.
அனைத்துலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுவதில் தமிழ் அறவாரியம் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சீனமொழி கல்வியின் ஆன்மா என்றழைக்கப்படும் லிம் லியன் கியோக் மெண்டரின், தமிழ் மற்றும் மலாய் ஆகிய மூன்று மொழிகளும் மலாயாவின் ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தை அவரது நினைவாக அமைப்பட்டுள்ள எல்எல்ஜி மையத்தின் பிரதிநிதி யவ் லீ பங் விவரித்தார்.
அவரது தீவிர போராட்டத்திற்குத் தண்டனையாக சுதந்திர மலாயா அரசாங்கம் அவரது குடியுரிமையையும் அவரது ஆசிரியர் தொழிலுக்கான உரிமத்தையும் பறித்தது என்றும் அவருக்காக நாட்டின் சிறந்த வழக்குரைஞர்களான ஆர். ரமணியும் பிஜி லிம்மும் போராடியதை அவர் நினைவு கூர்ந்தார்.
தாய்மொழி கல்வியின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் விவரித்த கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டப பிரதிநிதி ஜீன் லீ, தாம் பல்கலைக்கழகம் வரையில் மெண்டரின் மொழியில் மட்டுமே கல்வி கற்றதாக கூறினார்.
இதர அமைப்புகளுடன் சேர்ந்து, 21 அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்பான போஆம் ஆதரவுடன், அனைத்துலக தாய்மொழி தினத்தின் இலட்சியத்தை மக்களிடம் பரப்ப வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
அனைத்துலக தாய்மொழி தினம் ஐநாவால் அங்கீகரிக்கப்பட்டது, அதன் பின்னணி மற்றும் இக்காலகட்டத்தில் தாய்மொழியில் போதனை எந்த அளவிற்கு மாணவர்களுக்கு நன்மை பயக்கிறது என்பதை கா.ஆறுமுகம் விளக்கமாக கூறினார்.
மலேசியா போன்ற பல்லின நாட்டில் தாய்மொழியில் கல்வி போதிக்கப்படுவது நாட்டு மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்க்கும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
பெப்ரவரி 21 ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்துலக தாய்மொழி தினம் நிகழ்ச்சியில் தமிழ், சீன, மலாய், பூர்வீக குடிமக்கள் ஆகியோரின் நடன, பாடல் நிகழ்வுகளுடன் தமிழக நாமக்கல் கவிஞரின் மகன் ராஜா ராமலிங்கம் இந்நிகழ்வில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்த சிறப்புரையாற்றுவார். ராஜா ராமலிங்கம் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
மலேசியாவில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த அனைத்துலக தாய்மொழி தினம் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வரும் உஷாராணி மலேசிய மக்கள் திரளாக வந்து இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்பு: உஷாராணி 012-3833677. தமிழ் அறவாரியம் 03-26926533.
INTERNATIONAL MOTHER TONGUE DAY 2012
(Jointly Organised by Tamil Foundation, Lim Lian Geok (LLG) Cultural & Development Centre & KL & Selangor Chinese Assembly Hall and
Faculty of Languages & Linguistics, University Malaya.
Supported by Gabungan Bertindak Malaysia (GBM)
Venue: Dewan Kuliah Angsana, Faculty of Language & Linguistics,
Persiaran Bernas, University Malaya
Date: 21 February 2012 (Tuesday)
Time: 6.30pm – 10.00 pm
PROGRAMME
6.00 – 6.30pm – Arrival of Guests
6.30 – 7.00pm – Registration & Refreshments
7.00 – 7.10pm – Negaraku & Tamil Vaalthu
7.10 – 7.15pm – Welcoming Speech by MC’s
7.15 – 7.50pm – Guest Speaker- Mr Raja Ramalingam (US)
7.50 – 8.00pm – Performance – Indian Dance (Ms Geetha Arumugam)
8.00 – 8.10pm – Speech by Tamil Foundation President
(Mr S. Pasupathi)
8.10 – 8.20pm – Performance – Orang Asli
8.20 – 8.30pm – Speech by GBM President
(Encik Zaid Kamaruddin)
8.30 – 8.40pm – Performance – Malay Dance
8.40 – 8.50pm – Speech by LLG Director
(Dato Dr Toh Kin Woon)
8.50 – 9.00pm – Performance – Chinese Dance
9.00 – 9.30pm – Resolution by All Speakers on Stage
9.30 – 9.50pm – Performance by UM students
9.50 – 10.00pm – Closing Speech by Tamil Foundation President
(Mr S. Pasupathi)