பாஸ் இஸ்லாமிய நாட்டை வற்புறுத்தாது என டிஏபி வாக்குறுதி

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய நாட்டை ஏற்படுத்த பாஸ் முயற்சி செய்யும் என்ற அச்சத்தை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அகற்றும் முயற்சியில் ஒரு பகுதியாக அந்த இஸ்லாமியக் கட்சி ஹுடுட் சட்டத்தை அமலாக்க முயலாது எனக் கூறியிருக்கிறார்.

பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில் சித்தாந்த வேறுபாடுகள் இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், மற்ற விஷயங்களில் ஒத்துழைப்பதை அந்த வேறுபாடுகள் தடுக்கவில்லை என்றார்.

“அது பாஸ் சித்தாந்தம். அதனை அவர்கள் எங்கள் மீது திணிப்பதில்லை. அது பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கையில் இல்லை. ஆகவே அது அமலாக்கப்பட மாட்டாது,” என நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில் டிஏபி நடத்திய நீதி திரட்டும் விருந்தில் லிம் கூறினார். அதில் மலேசியச் சீனர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்தனர்.

தாம் ஏற்கனவே அதனை பாஸ் பொதுக் கூட்டம், 20,000 பாஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் உட்பட பல நிகழ்வுகளில் தெரிவித்துள்ளதாகவும் லிம் சொன்னார்.

“நாங்கள் ஹுடுட் சட்டத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்பதே டிஏபி-யின் நிலையாகும். நாங்கள் பாஸ் ஹுடுட்-டை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் டிஏபி பாஸ் கட்சியுடன் ஒத்துழைக்க முடியாது என்றோ பாஸ், டிஏபி-யுடன் ஒத்துழைக்க முடியாது என்றோ பொருள் கொள்ளக் கூடாது.”

“நாங்கள் ஊழலை எதிர்த்துப் போராடுவதில், அநீதியை எதிர்த்துப் போராடுவதில் மலேசியர்கள் நேர்மையற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிராகப் போராடுவதில் ஒத்துழைக்க முடியும்.”

பாஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் ஹுடுட் சட்டத்தையும் இஸ்லாமிய நாட்டையும் அமலாக்கும் எனக் கூறி பிஎன் குறிப்பாக மசீச அடிக்கடி பாஸ் சித்தாந்தத்தைத் தாக்கிப் பேசி வருகிறது.

TAGS: