கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு என்ற முகமட் சாபு, பத்து எம்பி தியான் சுவா ஆகியோர் உட்பட 16 பேரை செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்ததை மாற்றி அவர்கள் எதிர்வாதம் புரிய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
அந்த 16 எம்பி-க்களில் பாடாங் செராய் தொகுதிக்கான சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் என் கோபால கிருஷ்ணனும் ஒருவர் ஆவார்.
2007ம் ஆண்டு நிகழ்ந்த பெர்சே பேரணியில் பங்குகொண்டது தொடர்பில் அவர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரம் இருப்பதாக நீதிபதி கசாலி சாஆ கூறினார்.
“போலீஸ் வழங்கிய வாய்மொழி சாட்சியத்துக்கு ஆதரவாக வீடியோ ஆதாரம் இருப்பதாக நான் கருதுகிறேன். சாட்சிகள் ஆதாரத்தை கொடுக்கும் போது கதைகளைப் புனையவில்லை. அந்தப் பேரணியில் பங்கு கொண்டவர்கள் பொது அறிவு உள்ளவர்கள் என்பதை விசாரணை நீதிபதி பரிசீலினைக்கு எடுத்து கொள்ளத் தவறி விட்டார்.”
“அவர்கள் சட்ட விரோதப் பேரணி ஒன்றில் பங்கு கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். பங்கேற்பாளர்கள் மஞ்சள் நிற, சிவப்பு நிற டி சட்டைகளை அணிந்திருந்தனர். அதிகாரிகள் அவர்கள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர். அந்தப் பேரணியின் விளைவாக பதற்ற நிலை உருவானது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.”
ஆகவே அவர்களுக்கு எதிரான வழக்கில் போதுமான ஆதாரம் இருப்பதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது என நீதிமன்றம் கருதுகிறது. அதனால் அவர்கள் எதிர்வாதம் புரிய வேண்டும் என ஆணையிடப்படுகிறது என நீதிபதி கசாலி சொன்னார்.
அவர்களுடைய எதிர்வாதத்தை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்களை விடுதலை செய்த நீதிபதி ஜக்ஜித் சிங் பாந்த் சிங் செவிமடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கசாலி ஆணையிட்டார்.
2007ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பெர்சே பேரணி தொடர்பில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு காலமாகி விட்டார்.
அரண்மனையிடம் மகஜர் ஒன்றைத் தாக்கல் செய்வதற்கான அனுமதியைப் போலீசாரிடமிருந்து மாட் சாபுவும் மற்ற 16 பேரும் பெற்றிருந்ததாக 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி அவர்களை விடுதலை செய்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜக்ஜித் சிங் கூறினார்.
“சட்ட விரோதக் கூட்டம் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் பேரணிக்குப் பின்னர் அமைதியாகக் கலைந்து சென்றதை ஆதாரங்கள் காட்டின,” என்றும் அவர் சொன்னார்.