மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை உறுதி, சிலாங்கூர் எம்பி நம்பிக்கை

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்காதிருக்கலாம், ஆனால், பக்காத்தான் ரக்யாட் சிலாங்கூரில் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்வதுடன் கூடுதல் இடங்களையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நெஞ்சு நிறைய நிரம்பியுள்ளது.

“எங்களுக்குக் கிடைத்த ஆய்வுத் தகவல்கள் பக்காத்தான் இப்போதிருப்பதைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்பதைக் காட்டுகின்றன. மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பும் உள்ளது”, என்று ஊடகங்களைச் சந்திக்கும் நிகழ்வு ஒன்றில் காலிட் கூறினார்.

தேர்தலில் வெற்றிபெறும் நம்பிக்கை பிரதமர் நஜிப்புக்கு இருந்திருந்தால் கடந்த ஆண்டு நவம்பரில் அல்லது சீனப் புத்தாண்டின்போதே நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பார் என்றாரவர்.

“சிலாங்கூரில் அம்னோவின் தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், அதேபோல் மசீசவைத் தீவிரமாக ஆதரிக்கும்  சிறிய எண்ணிக்கையினர் உண்டு. மஇகா ஆதரவாளர்கள் சிலர் உண்டு.

“ஆனால் ஆய்வு முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. குறிப்பாக 40 வயதினரிடையேயும் அதற்குக் குறைந்தவர்களிடையேயும் எங்களுக்குப் பேராதரவு உள்ளது”, என்றார்.

சிலாங்கூர் பக்காத்தான், இப்போதுள்ள  இடங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் மேலும் 10 இடங்களைக் கைப்பற்ற முடியும் என்றும் நம்புவதாக காலிட் தெரிவித்தார்.

அது கைப்பற்றப்போகும் புதிய இடங்களில் ஒன்றாக கோலா குபு பாரு இருக்கலாம். அதன் இப்போதைய சட்டமன்ற உறுப்பினர், மசீச மாநிலத் தொடர்புக்குழுச் செயலாளர் வொங் கூன் முன்.

வெற்றிபெறும் வாய்ப்புள்ள மற்ற தொகுதிகளை அவர் குறிப்பிட விரும்பவில்லை. சொல்லிக்கொண்டே போனால் “அவர்களுக்கு மாரடைப்பு வந்துவிடும்” என்று கிண்டலடித்தார்.

இப்போது சட்டமன்றத்தின் 56 இடங்களில் 35 பக்காத்தானிடம் உள்ளன.

மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெற மேலும் 3இடங்கள் அதற்குத் தேவை. 38இடங்கள் அதன் வசமிருந்தால் மாநில அரசமைப்பில் விரும்பும் திருத்தங்களைச் செய்ய அதனால் முடியும்.

பிஎன் கூட்டங்கள் அயலார்களைக் கொண்டது

2008-இல் சிலாங்கூரை இழந்த பிஎன், நாட்டின் வளமிக்க அம்மாநிலத்தைத் திரும்பக் கைப்பற்ற மிகுந்த முயற்சி செய்து வருகிறது.அதற்காக நிறைய செலவிடுகிறது,தொடர்ந்து பரப்புரைகளையும் செய்து வருகிறது.

பிஎன் நிகழ்வுகளுக்குப் பெரும் கூட்டம் திரள்வதைச் சுட்டிக்காட்டியபோது அவர்களில் மிகப்பலர் பேருந்துகள் மூலம் வெளியிலிருந்து கொண்டுவரப்படுபவர்கள் என்று காலிட் கூறினார்.

“பிரதமர், துணைப்பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் பற்றி ஆய்வு செய்தோம். அதே ஆட்கள்தாம் திரும்பத் திரும்ப வருகிறார்கள்.”

சிலாங்கூர் ஜூன் மாதத்துக்கு முன்னதாக மாநிலத் தேர்தலை நடத்துவதில்லை என்பதிலும் காலிட் திட்டவட்டமாக உள்ளார். மக்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகே மாநிலத் தேர்தல்கள் என்றாரவர்.

TAGS: