கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்ற பின்னர் தாம் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக கெடா மாநில பாஸ் துணை ஆணையாளர் பாஹ்ரோல்ராஸி ஸாவாவி கூறுகிறார்.
பாஹ்ரோல்ராஸிக்கும் அவரது எஜமானரான கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்-கிற்கும் இடையிலான தகராறைத் தீர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் தீர்வு ஏதும் காணப்படவில்லை.
அந்தத் தகராற்றை தீர்க்கும் கடைசி நேர முயற்சியாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்றிரவு கெடாவுக்கு நேரடியாகச் செல்கிறார்.
“நான் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு பாஸ் மத்தியக் குழுத் தலைவர்களும் தொகுதித் தலைவர்களும் சந்திக்கும் வரையில் ஏதும் பேச வேண்டாம் என என்னிடம் கூறப்பட்டது,” என பாஹ்ரோல்ராஸி சொன்னதாக தி ஸ்டார் நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மந்திரி புசார் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாநில ஆட்சி மன்றத்துக்கு மீண்டும் நியமிக்கப்படுவதை நிராகரிக்கும் கடிதம் ஒன்றை பாஹ்ரோல்ராஸி-யும் அலோர் மெங்குடு சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சாலே-யும் அஜிஸானுக்குக் கடந்த வாரம் எழுதிய பின்னர் தகராறு வெளிச்சத்துக்கு வந்தது.
வரும் செவ்வாய்க்கிழமை அவர்களது நியமனங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
அந்த இருவரையும் மீண்டும் நியமிக்குமாறு பாஸ் மத்தியக் குழு ஆணையிட்ட போதிலும் அஜிஸான் அவ்வாறு செய்ய மறுத்து விட்டார். ஆனால் பின்னர் இறங்கி வந்து அந்த இருவருக்கும் நேசக் கரம் நீட்டினார்.
தகராற்றுக்கு மேலாக கட்சி ஐக்கியத்தைக் கருதுமாறு மத்தியக் குழு கேட்டுக் கொண்ட போதிலும் இன்னும் அறிவிக்கப்படாத நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத வரையில் பதவிகளை ஏற்றுக் கொள்ள பாஹ்ரோல்ராஸி- ம் இஸ்மாயில் சாலே-யும் மறுத்து பிடிவாதப் போக்கைப் பின்பற்றுகின்றனர்.