மாணவர்கள் பெர்சே பாணியில் ஏப்ரல் 14ஆம் தேதி பேரணி நடத்துவர்

Solidariti Mahasiswa Malaysia என அழைக்கப்படும் மாணவர் அமைப்பு, அடுத்த மாதத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள பெரிய பேரணிக்கு முன்னோடியாக  Malaysia Bangkit  (மலேசிய எழுச்சி) என்னும் இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளது.

அந்தப் பேரணி பெர்சே 2.0, Himpunan Hijau பேரணிகளைப் போன்று இருக்கும் என அந்த இயக்கத்தின் தலைவர் முகமட் ஷாஹிட் முகமட் ஜைனி கூறினார்.

தாங்கள் ஏற்றுக் கொள்ளவிருக்கும் இந்த நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்காக 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்துவதற்காக இளைஞர்களை ஒன்று திரட்டும் நோக்கத்தை அந்த இயக்கம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த 9 அம்சங்கள் வருமாறு:

ஊழலை ஒழிப்பது
தூய்மையான தேர்தல்கள்
சுதந்திரமான பத்திரிக்கைத் துறை
இலவச சுகாதாரக் கவனிப்பு
இலவசக் கல்வி
இலவசமான போக்குவரத்து
உயர்ந்த வருமானத்தைக் கொண்ட சமூகம்
பசுமையான நாடு
அரசமைப்பை நிலை நிறுத்துவது

“இளைய தலைமுறையினருடைய எண்ணங்களை அங்கீகரிப்பதில் அரசாங்கம் உண்மையில் ஈடுபாடு கொண்டிருந்தால் எங்களுடைய அந்த 9 அம்ச கோரிக்கைகளை ஏற்க வேண்டும்,” என ஏப்ரல் 14ம் தேதி பேரணிக்கான தொடக்க விழாவை புக்கிட் பிந்தாங்கில் இன்று மாலை நடத்திய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார்.

கோலாலம்பூர் மாநகர மையத்தில் வர்த்தகங்களும் கடைகளும் நிறைந்துள்ள அந்தச் சாலையில் 20க்கும் மேற்பட்ட மாணவர் போராளிகள் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அந்தச் சாலையில் நடந்து சென்ற வழிப்போக்கர்களிடம் அவர்கள் தங்களது மனக்குறைகளை தெரிவிக்க அந்தப் பதாதைகள் உதவின.

விளையாட்டு அரங்கம் ஒன்றில் ஏப்ரல் 14ம் தேதி பேரணி நிகழும்

அந்த நிகழ்வு குறித்து மேல் விவரங்களைக் கேட்டறிந்த போலீசார் அந்த மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு சீருடை அணிந்த சாதாரண உடை அணிந்திருந்த 10க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஏப்ரல் 14ம் தேதி பேரணிக்கு முன்னதாக நாடு முழுவதும் பல விளக்கக் கூட்டங்களை நடத்தவும் ஏப்ரல் 7ம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

“நாங்கள் அந்தப் பேரணியை விளையாட்டு அரங்கம் ஒன்றில் நடத்த எண்ணியுள்ளோம். இப்போதைக்கு நாங்கள் ஷா அலாமில் உள்ள மெலாவாத்தி அரங்கத்தை பரிசீலித்து வருகிறோம்,” என முகமட் ஷாஹிட் விளக்கினார்.

TAGS: