நஜிப் பிஎன் செய்த கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டார்

கடந்த பொதுத் தேர்தலில் பிஎன் செய்த தவறுகளுக்காக அந்தக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களிடம் இன்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அந்தத் தவறுகள் காரணமாக கெடா உட்பட பல மாநிலங்களையும் பல தொகுதிகளையும் பிஎன் இழந்தது என்றார் அவர்.

பிஎன் அந்தத் தவறுகளை சரி  செய்து தன்னால் முடிந்த வரை மக்களுக்கு சேவை செய்யும் என அவர் சொன்னார்.

“நாங்கள் அகங்காரத்துடன் நடந்து கொள்ளக் கூடாது என நான் நம்புகிறேன். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாம் மக்களுடைய அதிகாரத்துக்குக் கட்டுப்பட வேண்டும்.”

“நாங்கள் தவறுகள் செய்திருக்க வேண்டும். அதற்காக மக்களை எங்களை நிராகரித்து விட்டனர். கடந்த காலத் தவறுகளுக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம். வெற்றி பெற்றவர்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும். தோல்வி கண்டவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும்,” என பாலிங்-கிற்கு அருகில் உள்ள கோலக் கெட்டில் பொதுத் திடலில் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் நஜிப் கூறினார்.

பிஎன் அந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

“கடந்த காலம் அப்படியே இருக்கட்டும். மலேசிய மக்களுக்கும் கெடா மக்களுக்கும் நாங்கள் உருமாற்றத்திற்கு வாக்குறுதி அளிக்கிறோம். அதற்கான பயணம் தொடங்கி விட்டது”, என்றார் அவர்.

பிஎன் மட்டுமே மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க முடியும் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

“எங்கள் திட்டங்கள் தெளிவானவை. எங்களிடம் நன்கு தயாரிக்கப்பட்ட திட்டங்கள் உள்ளன. எங்களிடம் புள்ளி விவரங்கள் உள்ளன. முன்னேற்றம் கண்ட நாடாக மலேசியாவை மாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் எங்களிடம் உள்ளன.”

மக்களுக்கு அதிக நன்மைகளைத் தரக் கூடிய உருமாற்றத்தைக் கொண்டு வரும் நிலையில் அரசாங்கம் இருப்பதை உணர்த்தும் தெளிவான அறிகுறிகளை வழங்கவும் அரசாங்கம் விரும்புகிறது என்றும் நஜிப் சொன்னார்.

பெர்னாமா

TAGS: