2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்றது உட்பட கடந்த கால பிஎன் தவறுகளுக்காக அந்தக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பது அந்தக் கட்சியின் தன்னடக்கத்தை காட்டுகிறது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார்.
எதிர்காலத்தை குறிப்பாக அடுத்த எட்டு ஆண்டுகளில்- 2020க்குள் மலேசியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதை நோக்கி செல்வதே இப்போது முக்கியம் என பிஎன் துணைத் தலைவருமான முஹைடின் சொன்னார்.
“பிரதமர் சொன்னது தன்னடக்கத்தைக் காட்டுகிறது. மனிதர்கள் என்ற முறையில் எங்களுக்கும் பலவீனங்கள் உண்டு. பிஎன் கீழ் இயங்கும் அரசாங்கத்தில் பலவீனங்கள் இருப்பதும் பல தவறுகள் நிகழ்ந்திருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதும் எங்களுக்குத் தெரியும்.’
“பொதுவாக 54 ஆண்டு காலத்தில் பலவீனங்கள் இருந்த போதிலும் சமூக-பொருளாதாரம், பண்பாடு, அனைத்துலக உறவுகள், கல்வி மற்றும் பல துறைகளில் நாம் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது,” என அவர் கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்தில் 2012ம் ஆண்டுக்கான உலக சிறுநீரக தினத்தை தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலில் பிஎன் செய்த தவறுகளுக்காக அந்தக் கூட்டணியின் சார்பில் நேற்று நஜிப் அந்தக் கூட்டணியின் சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த தவறுகளினால் கெடா உட்பட சில மாநிலங்களையும் பல தொகுதிகளையும் இழந்தது என அவர் சொன்னார்.
பிஎன் இப்போது வேறு விதமாக இயங்குகிறது
அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள ஒரே மலேசியா கோட்பாடு உட்பட பல்வேறு உருமாற்றத் திட்டங்கள், அந்த பலவீனங்களைச் சரி செய்வதையும் இது வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதை மக்கள் இப்போது உணரத் தொடங்கியிருப்பதாக தாம் கருதுவதாகவும் முஹைடின் சொன்னார்.
“தேசிய உருமாற்றத் திட்டத்தைப் போல அதில் பொருளாதாரம், அரசியல், கிராமப்புறம் உட்பட அனைத்தும் அடங்கியுள்ளன. பிஎன் அரசாங்கமும் பிரதமரும் எடுத்துள்ள புதிய அணுகுமுறையும் அதில் அடங்கியுள்ளது.”
“அது நல்ல பலனைத் தந்திருப்பதை மக்கள் இப்போது காணத் தொடங்கியுள்ளனர். அது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது,” என்றும் முஹைடின் சொன்னார்.
அதனை மக்கள் புரிந்து கொண்டிருப்பதாலும் ஏற்றுக் கொண்டிருப்படாலும் பிஎன் அரசாங்கத்தின் ஆற்றல் மீது அவர்களுக்கு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது என்றார் அவர்.
12வது பொதுத் தேர்தலில் பிஎன் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்தது அதற்கு படிப்பினை என்றும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.