பிரதமருடைய ஒரே மலேசியா நோன்புப் பெருநாள் திறந்த இல்லை உபசரிப்பு பெர்மாத்தாங் பாவில் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது “அன்வார் பயம் குறித்த மறைமுக அங்கீகாரம் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் அந்தத் தொகுதி மிக முக்கியமானது என பிஎன் அங்கீகரித்துள்ளதையும் அது உணர்த்துவதாக அவர் சொன்னார்.
“நூற்றுக்கணக்கான தொகுதிகளுக்கு இடையில் அது பெர்மாத்தாங் பாவைத் தேர்வு செய்துள்ளது எங்களுக்குக் கௌரவத்தைத் தந்துள்ளது.”
அன்வார் பினாங்கு குபாங் செமாங்கில் பினாங்கு துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான் அளித்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
அரசாங்கக் கட்டுக்குள் இருக்கும் ஊடகங்களில் தாம் எதிர்மறையாகச் சித்திரிக்கப்படுவதாக வருத்தத்துடன் குறிப்பிட்ட அவர், “அது யூதர்களாக இருந்தாலும் அல்லது சீனர்களாக இருந்தாலும் எல்லாம் அன்வார்”, என அவர் புன்முறுவலுடன் கூறினார்.
“ஒவ்வொரு ஊடகத்துக்கும் நாளேட்டுக்கும் அந்த அச்ச உணர்வு லேலோங்கியுள்ளது”, எனக் குறிப்பிட்ட அவர்,” நோம்புப் பெருநாள் திறந்த இல்லமாக இருந்தாலும் கூட அது பெர்மாத்தாங் பாவில் இருக்க வேண்டும்”, என்றார்.
செப்டம்பர் மாதம் 11ம் தேதி பெர்மாத்தாங் பாவில் தேசிய நிலையிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் என கடந்த வாரம் தகவல், கலை பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் அறிவித்தார்.
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்ற இடங்களில் ஒன்றான பெனாந்தியில் அமைந்திருக்கும் குவார் பெராகு தேசிய இடைநிலைப் பள்ளித் திடலில் அந்த உபசரிப்பு முற்பகல் 11.30 தொடக்கம் பிற்பகல் 1 வரை நிகழும்.
அந்த நிகழ்வை வரவேற்ற அன்வார் அதற்கு தமக்கு அழைப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
பிகேஆர் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட பெர்மாத்தாங் பாவ் மக்கள் அனைவரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதோடு குழந்தைகள் பிரதமர் வழங்கும் “நோன்புப் பெருநாள் பணத்தையும்” ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.