தொகுதி ஒதுக்கீடு பற்றி பக்காத்தான் தலைவர்கள் பேச மாட்டார்கள்

பக்காத்தான் ரக்யாட் உறுப்புக் கட்சிகளுக்கிடையில் தொகுதி ஒதுக்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அதன் தொடர்பில் அறிக்கை விடக்கூடாது என்று மாநிலத் தலைவர்களிடம் கூறப்பட்டுள்ளதாக மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

13வது பொதுத்தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுகளில் சில மாநிலங்கள் முடிவுகாணும் தருவாயில் உள்ளன என்றும் மற்றவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் பக்காத்தான் தலைவர் தெரிவித்தார்.

அடுத்த பொதுத்தேர்தல் 2013 நவம்பரில்தான் நடக்க வேண்டும். ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இவ்வாண்டு நவம்பரிலேயே தேர்தலை நடத்தலாம் என்ற ஊகம் பலமாகவே அடிபடுகிறது.

கடந்த வாரம் கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் பக்காத்தான் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், பக்காத்தானில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளுக்கிடையே தொகுதி ஒதுக்கீடு தொடர்பில் எல்லா மாநிலங்களும் பேச்சுகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முடிவு காணப்பட்டது.

“பேச்சுகளைத் தொடர்ந்து நடத்தி அவர்களின் கருத்துக்களை முன்வைக்குமாறு மாநில டிஏபி, பாஸ், பிகேஆர் தலைவர்களுக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது. பேச்சுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால் அது பற்றி அறிக்கைகள் விட வேண்டாம் என்று அவர்களிடம் கூறப்பட்டுள்ளது”, என்று அன்வார் தெரிவித்தார்.

“அதன் தொடர்பில் சிலர் அறிக்கைகள் விடுத்திருப்பதைக் காண்கிறோம். ஆனால், இன்னும் முடிவுகாணப்படாத விசயங்கள் பற்றி அறிவிக்காமல் இருப்பதே நல்லது என்பதுதான் தலைமைத்துவத்தின் கருத்தாகும்”, என்று அன்வார் நேற்று கூப்பாங் செமாங்கில் ஹரி ராயா விருந்து ஒன்றில் கூறினார்.அது, அவரும்,பினாங்கு துணை முதலமைச்சர் மன்சூர் ஒஸ்மானும் சேர்ந்து நடத்திய விருந்தாகும்.

தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு காண்பது மாற்றரசுக்கட்சிகளிடையே எப்போதும் இழுபறியாகத்தான் இருந்து வந்துள்ளது.

சில மாநிலங்களில் ஒவ்வொரு கட்சியும் கூடுதல் இடங்களைக் கோருவதும், சில தொகுதிகளில் மூன்றும் போட்டியிட விருப்பம் கொண்டிருப்பதும் பேச்சுகளில் சிக்கலை ஏற்படுத்தி விடுவதாக தெரிகிறது.

கடந்த வாரம், பினாங்கு டிஏபி செயல்குழு உறுப்பினர் சுல்கிப்ளி முகம்மட் நோர்,  பிகேஆர் அதன்வசமுள்ள ஆறு இடங்களை-ஒரு நாடாளுமன்றத் தொகுதி, ஐந்து சட்டமன்றத் தொகுதிகள்- டிஏபி மலாய் வேட்பாளர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. டிஏபியில் மலாய்க்காரர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்ற கருத்தைப் போக்க அவ்வாறு செய்யப்படுவது அவசியம் என்றாரவர்.

மாநில அளவில் பேச்சுகள் நடத்தி முடிவுகாணப்பட்டாலும்கூட அவர்களின் முடிவை தேசியத் தலைமைத்துவம் ஏற்க வேண்டும் என்பதால் மாநிலத் தலைவர்கள் முந்திக்கொண்டு அறிக்கை விடுக்கக்கூடாது என்றும் அன்வார் நினைவுறுத்தினார்.

பொதுவில்,பக்காத்தானில் தொகுதி ஒதுக்கீடு மீதான பேச்சுகள் 2008-இல் 12வது பொதுத்தேர்தலின்போது நடந்ததைவிட இப்போது நன்றாகவே நடந்து வருகிறது. 

“அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது பக்காத்தான் முக்கிய விசயங்களுக்குத் தீர்வுகாணாமல் இருந்தது.இன்று முக்கியமான விசயங்களையெல்லாம் கடந்து வந்துவிட்டோம்”, என்று பெர்மாத்தாங் ப்பாவ் எம்பியான அன்வார் கூறினார்.

பினாங்கைப் பொறுத்தவரை, முதலமைச்சர் லிம் குவான் எங், மன்சூர், மாநில பாஸ் ஆணையர் சாலே மான் ஆகியோருடன் கலந்துபேசி பெரும்பாலான தொகுதிகள் மீது முடிவெடுக்கப்பட்டுவிட்டது என்றும் இறுதி அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.

TAGS: