“நஜிப்,உங்கள் தவறுகளுக்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள்”

பிரதமர், பிஎன் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது என்று கூறும் டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங், நஜிப் அப்துல் ரசாக்கே அவரது 35-மாத ஆட்சியில் அனேக தவறுகளைச் செய்துள்ளார் என்கிறார்.

டிஏபி அரசியல் செயலாளர் தியோ பெங் ஹொக்கின் மரணமும் அதில் ஒன்று என அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.தியோ, 2009 ஜூலையில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏச்சி) விசாரணைக்குச் சென்றபோது மரணமுற்றார்.

“அது இன்னமும் மர்மமாக,அரசாங்க ரகசியமாக இருக்கிறது….அப்படி இருக்க எந்தத் தவறுகளுக்காக நஜிப் மன்னிப்பு கேட்கிறார்….நஜிப் செய்துள்ள தவறுகளே எக்கச் சக்கமாயிற்றே”, என்று அந்த ஈப்போ தீமோர் எம்பி குறிப்பிட்டார்.

“…(தியோவின்)கொலைகாரர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது, அஹ்மட் சர்பானி முகம்மட் எம்ஏசிசி கட்டிடத்தில் உயிரிழந்ததற்குப் பொறுப்பானனவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தாதது, போலீஸ் காவலில்  இறந்துபோன குகனின் மரணம்மீதும் காவலில் இருந்த மற்றவர்களின் இறப்பின்மீதும் நடவடிக்கை மேற்கொள்ளாதது முதலியவை அதில் (அவரது தவறுகளில்) அடங்கும்.

மிக அண்மையில், மலேசிய விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தாஜுடினுக்கும் தானாஹர்த்தா உள்பட அரசுசார் நிறுவனங்களுக்குமிடையிலான வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடிவுசெய்து அவருக்கு ரிம840மில்லியன் கொடுக்கப்பட்டது.

அதைக் குறிப்பிட்டு“டாக்டர் மகாதிர் காலத்திய ஊழல்களுக்கு மலேசியர்கள் இன்னமும் கொட்டி அழ வேண்டியிருக்கிறது”, என்றாரவர்.

நஜிப் பிரதமராக உள்ள காலத்தில்தான் ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல்(Transparency International ) ஊழல் பட்டியலில் மலேசியா “மிகவும் மோசமான நிலைக்கு” 60வது இடத்துக்கு இறங்கியுள்ளது.

“இது மலேசியா அதன் 55ஆண்டுக்கால வரலாற்றில் ஊழலில் மிக மோசமான நிலையை எட்டிவிட்டதைக் காண்பிக்கிறது”, என்றாரவர்.

ஊழல்களும் வேண்டியவர்களுக்கு சலுகை காட்டும் போக்கும் தொடர்கின்றன. ரிம2.2பில்லியன் நெடுஞ்சாலைத் திட்டத்துக்கான குத்தகை அம்னோவுடன் தொடர்புகொண்டவர்களின் இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேராக்கில் “சட்டவிரோதமாகவும் ஜனநாயகத்துக்குப் புறம்பாகவும் அரசமைப்புக்குப் புறம்பாகவும் ஆட்சியைக் கைப்பற்றியதற்காக” நஜிப்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லிம் சொன்னார்.

“பிஎன்னின் கடந்த காலத் தவறுகளுக்குள் செல்லாமல், நஜிப் 35மாதங்களில் செய்த தவறுகளை அடுக்கினாலே நீண்ட பட்டியலாகும்.

“அப்படியிருக்க நஜிப், எங்கிருந்து தொடங்கப் போகிறார்?”, என்று லிம் வினவினார்.

TAGS: