மொங்-கின் கடிதம் மீது போலீசார் உடற்குறையுடைய விவசாயியை விசாரித்தனர்

எதிர்க்கட்சிகளை ஆதரித்ததற்காக விவசாய, சமூக நல உதவித் தொகைகள் நிறுத்தப்பட்ட உடற்குறையுடைய குடியானவர் பூருஸிஸ் லெபி-யை இன்று போலீசார் விசாரித்துள்ளனர்.

அந்த உதவிகளை நிறுத்துமாறு மாநில விவசாய நவீன மய துணை அமைச்சர் எழுதிய கடிதம் மீது பூருஸிஸ் செய்த போலீஸ் புகார் தொடர்பில் விசாரிக்கப்படுவதற்காக அவர் இன்று காலை மணி 10.30க்கு  ஸ்ரீ அமான் போலீஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.

அந்த உத்தரவு அடங்கியிருந்த கடிதம் பற்றி யார் அவருக்குத் தெரிவித்தார் என்பதையும் அது எப்படி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்பதையும் போலீசார் அறிய விரும்பியதாக  தொடர்பு கொள்ளப்பட்ட போது பூருஸிஸ் கூறினார்.

“தமக்கு வழங்கப்பட்ட உதவி ஏன் நிறுத்தப்பட்டது என்பது பற்றி தமக்கு தெரியுமா என்றும் போலீஸில் புகார் செய்ததின் நோக்கம் என்ன என்றும் அவர்கள் வினவினர்,” என அவர் சொன்னார்.

“மொங் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் மலேசியன் என்னும் முறையில் என் உரிமைகள் மறுக்கப்பட்டதால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு இலக்கானேன்,” என பூருஸிஸ் வருத்தத்துடன் சொன்னார்.

உடற்குறை இருந்த போதிலும் பூருஸிஸ் வேலை செய்ய முடியும் என்பதால் அந்த எதிர்க்கட்சி ஆதரவாளருக்கு உதவி அவசியமில்லை என தாம் கருதியதால் அந்த உத்தரவைப் பிறப்பித்ததாக தி சன் என்ற ஆங்கில மொழி நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் மொங் ஒப்புக் கொண்டுள்ளார்.

“நான் உடற்குறை உடையவன் என்பதற்கு மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனால் மொங்-கின் நடவடிக்கைகள் எனக்குச் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன,” என்றார் பூருஸிஸ்.

தமது உதவி மீண்டும் நிலை நாட்டப்படுவதற்கு பூருஸிஸ் முயற்சி செய்வாரா என கேட்கப்பட்ட போது,  “எனக்கு இப்போது ஒன்றும் புரியவில்லை,” என்றார் அவர்.

பதவி துறக்கவும் மொங்கு-ற்கு அறிவுரை

பூருஸிஸ் வாக்குமூலத்தை போலீஸ் பதிவு செய்யவில்லை என்றும் “புகாரைத் தொடர்ந்து தகவல் சேகரிக்க” போலீஸ் விரும்பியதாக  பூருஸிஸுக்கு உதவி செய்யும் ஸ்ரீ அமான் டிஏபி கிளைத் தலைவர் லியோன் ஜிமாட் டொனால்ட் கூறினார்.

“தொடக்கப் போலீஸ் புகாரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. போலீசார் ஒரு வேளை அந்தப் புகாரைத் திருத்துமாறு அவரைக் கட்டாயப்படுத்துவதற்கு முயற்சி செய்யக் கூடும்,” என அவர் சொன்னார்.

பூருஸிஸ் மீது பிடிவாதப் போக்கைப் பின்பற்றுகின்ற, புக்கிட் பெகுனான் சட்டமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான மொங், அந்தப் பதவிகளைத் துறக்க வேண்டும் என்றும் லியோன் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே தமது கடிதம் எப்படி வெளியில் கசிந்தது என்பதை விசாரிப்பதை தாம் போலீசாரிடம் விட்டு விடுவதாக மொங் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.