செப்.16-இல் சாபா, சரவாக் அரசியல்வாதிகள் பிஎன்னிலிருந்து விலகத் திட்டமிட்டிருந்தனர், விக்கிலீக்ஸ்

அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த ஆவணத்திலிருந்து கசிந்த ஒரு தகவல் 2008, செப்டம்பர் 16-இல் சாபா, சரவாக் அரசியல்வாதிகள் பிஎன்னிலிருந்து விலகத் திட்டமிட்டிருப்பதாக பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியது  உண்மைதான் என்று கூறுகிறது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த ஆவணம், சாபாவின் 25 எம்பிகளில் பெரும்பாலோர் பிஎன்னைவிட்டு வெளியேறத் தயாராக இருந்தனர் என்று முன்னாள் முதலமைச்சர் சாலே சைட் கெருவாக்கை  மேற்கோள்காட்டிக் கூறியிருந்தது.

சாபா மாநில எம்பிகள் ஜூன்18-இலிருந்து 20-வரை பல கூட்டங்களை நடத்திப் பேசினர் என்றும் அவற்றில் யாரும் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவிக்கு  “ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அந்த ஆவணம் தெரிவித்தது.

“14 பிஎன் எம்பிகள் கட்சி மாறுவர் என்று சாலே குறிப்பிட்டார்”, என்று 2008 ஜூன் 24 என்று தேதியிடப்பட்ட அந்த ஆவணம் கூறிற்று.

செப்டம்பர் 16-இல் மாற்றரசுக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று அன்வார் பல மாதங்களாக கூறிக்கொண்டிருந்தார். அப்படி எதுவும் நிகழவில்லை.அதனால், அது வெற்றுச் சவடால் என்றே கருதப்பட்டது. ஆனால், அப்படி அல்ல அதில் ஓரளவு உண்மை உண்டு என்பதை இப்போதுதான் பக்காதான் ரக்யாட்டுக்கு வெளியே உள்ள ஒரு வட்டாரத்தின் செய்தி உறுதிப்படுத்துகிறது.

ஆனால், எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடைபெறவில்லை. செப்டம்பர் 16-க்கு முன்பே ,அரசாங்க-ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் சங்கம் (பிஎன்பிபிசி), “கல்விச் சுற்றுலா” என்ற பெயரில் எம்பிகள் கூட்டமொன்றை-அதில். பெரும்பாலும் சாபா,சரவாக்  எம்பிகள் இடம்பெற்றிருந்தனர்- தைவானுக்கு அழைத்துச் சென்றுவிட்டது.
அதே நேரத்தில் இன்னொன்றும் அதிலிருந்து தெரிய வந்தது. சாபாவின் மூத்த அரசியல்வாதிகளுக்கு அப்துல்லாவின்மீது அதிருப்தி இருந்தாலும் அன்வாருக்கு ஆதரவு கொடுக்கும் எண்ணம் அவர்களிடம்  இருந்ததாகச் சொல்ல முடியாது.

1994-ல், மகாதிர் நிர்வாகத்தில் துணைப் பிரதமராக இருந்த அன்வார், மாநில பிபிஎஸ் அரசைக் கவிழ்க்க முக்கிய பங்காற்றியதை  அவர்கள் மறந்துவிடவில்லை.

பிபிஎஸ் தலைவரும், அக்கட்சியின் வீழ்ச்சியில் நேரடியாக பாதிக்கப்பட்டவருமான ஜோசப் பைரின் கிட்டிங்கான், அன்வாருக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெளிவாகவே புலப்படுத்தினார். அன்வார் “பிரதமர் ஆவதில் மட்டுமே ஆசை கொண்டவர்” என்று அவர் கூறியதாக அந்த ஆவணம் குறிப்பிட்டது.

அப்போதைய மாநில டிஏபி தலைவரும் இப்போதைய கோட்டா கினாபாலு எம்பியுமான ஹியு கிங் சுயு, “அன்வாரின்  விருப்பம் நிறைவேற எதற்காக மற்றவர்கள் தியாகம் செய்ய வேண்டும்?”, என்று கேட்டதாகவும் தெரிகிறது.  

அத்துடன் “சாபா அரசியல்வாதிகள் சிலர்” அம்னோ, கிழக்கு மலேசியா, பிகேஆர் டிஏபி ஆகியவற்றின் “அதிருப்தி கொண்ட எம்பிகளை”க் கொண்டு பிஎன்னுக்கும் பக்காத்தானுக்கும் வெளியில், முன்னாள் செமாங்காட் 46 தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா தலைமையில் மூன்றாவது அணியொன்றை உருவாக்குவது பற்றியும் கலந்து பேசியதாக அது குறிப்பிட்டது.

“அதே நேரத்தில் வேறு சில அரசியல்வாதிகள், பிபிஎஸ் தலைவர் பைரின் உள்பட, அப்துல்லாவுக்கு அடுத்து நஜிப் பிரதமர் ஆவதையே விரும்பினார்கள்.”

TAGS: