ஜிஎல்சி-க்களில் நல்ல நிறுவன நடைமுறைகளை உறுதி செய்யுங்கள்

சிலாங்கூர் மாநிலத்தை மேம்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு அண்மையில் 300க்கும் மேற்பட்ட ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ள போதிலும் அவர் அந்த நிறுவனங்களில் மோசமான நிறுவன நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கு அனுமதித்துள்ளார் என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் குறை கூறியிருக்கிறார்.

உண்மையான மேம்பாட்டைச் சீர்குலைக்கக் கூடிய, போட்டியை இல்லாமல் செய்கின்ற நிறுவன நடைமுறைகளுக்கு அவர் தொடர்ந்து ஊக்கமூட்டி, பல மோசமான நடைமுறைகள் வளருவதற்கு வழி வகுத்தால் நஜிப்பின் வேண்டுகோளுக்கு அர்த்தமில்லாமல் போய் விடும் என அவர் சொன்னார்.

“2008ம் ஆண்டுக்கு முன்னதாக சிலாங்கூரில் உருவாக்கப்பட்ட சட்டங்களும் கூட்டரசுக் கொள்கைகளும் ஊழல் மலிந்தவை,சலுகை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, சில தரப்புக்களுக்கு ஊட்டி விடுகின்றன,” என அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

தனியார் மயம், ஆதாயங்களை தனியார் மயமாக்கியுள்ளதையும் சமூக ரீதியில் இழப்புக்களைக் கொண்டு வந்துள்ளதையும் மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளதாகவும் காலித் குறிப்பிட்டார்.

“கூட்டரசு அரசாங்கம் அமலாக்கியுள்ள தனியார் மயத் திட்டங்கள் உண்மையில் வளர்ச்சியை நோக்கமாகக்

கொள்ளாமல் தோல்விகளைச் சரி செய்வதற்கு மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளன,” என்றும் கத்ரி பெர்ஹாட்டின் முன்னாள் தலைமை நிர்வாகியுமான அவர் சொன்னார்.

சிலாங்கூர் அரசாங்கம் அதற்கு நேர் மாறாக ஜிஎல்சி-க்கள் தாங்கள் நடத்துகின்ற எந்தத் தொழிலும் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்வதையும் போட்டி ஆற்றலைக் கூர்மையாக்கிக் கொள்வதையும் உறுதி செய்ய முயலுவதாக காலித் குறிப்பிட்டார்.

“ஜிஎல்சி-க்கள் சொந்தமாக போட்டி ஆற்றலை வளர்த்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும். அரசாங்கம் வழங்குகின்ற மானியங்களை அதிகமாக நம்பியிருக்கக் கூடாது. நாட்டின் நிதி வளப்பத்தை புற்று நோய் போல அரித்துக் கொண்டிருக்கும் ‘ஆதரவு வர்க்கம்’ வளர அனுமதிக்கக் கூடாது.”

நஜிப் அனைத்து ஜிஎல்சி-க்களுடைய பண்பாட்டையும் மாற்ற வேண்டும். நல்ல நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவற்றுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். அவர் அதனைச் செய்யத் தவறினால் “நாட்டை பல தசாப்தங்களாக சீரழித்துக் கொண்டிருக்கிற கசிவுகள் மேலும் அதிகமாகும்  என காலித் வலியுறுத்தினார்.

தனியார் மய நடவடிக்கைகள் சேவகர்களுக்கு அதிகமாக ஆதாயமளிப்பதை நிறுத்தவும் மக்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் அவற்றை சீர்திருத்தும் முயற்சிகளை தொடரும் என அவர் மேலும் சொன்னார்.

“கூட்டரசு அரசாங்கமும் நஜிப்பும் தங்கள் முயற்சிகளில் உண்மையானவர்களாக இருந்தால் இந்த வழிமுறைக்கு ஆதரவளிக்க வேண்டும்” என அவர் சொன்னார்.

TAGS: