பாஸ்: கெடா “எம்பி”-யை மாற்றும் திட்டம் இல்லை

பாஸ் கட்சி , கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் நோயுற்றிருப்பதால் அவரின் இடத்தில் மற்றொருவரை நியமனம் செய்ய விரும்புகிறது என்று ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தியை   மறுக்கிறது.

“தமக்குப் பதில் இன்னொருவரை அமர்த்தும் பாஸின் முயற்சியை அசிசான் எதிர்க்கிறார்” என்ற தலைப்பில் த ஸ்டாரில் வெளிவந்துள்ள செய்தியைக் குறிப்பிட்டு அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.

அது பற்றிக் கட்சியில் விவாதிக்கப்பட்டதே இல்லை என்று துவான் இப்ராகிம் சொன்னார்.

மந்திரி புசாரை மாற்றுவதன் தொடர்பில் பாஸ் தலைவர் ஹாடி ஆவாங் கெடா சுல்தானைச் சென்று காண்பார் என்று த ஸ்டார் கூறியிருந்தது.

புதிய மந்திரி பதவிக்கு, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான பாலோரோசி முகம்மட் ஸவாவி(பெங்காலான் குண்டோர்), அமிருடின் ஹம்சா (அனாக் புக்கிட்), முகம்மட் தவுலான் மாட் ரசுல்( தொக்காய்) ஆகியோர் உள்பட  பலர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அது கூறியது.

ஹாடி, இவ்வாரக் கடைசியில் மாநிலத் தலைவர்களச் சந்திக்க அலோர் ஸ்டார் செல்கிறார்.

ஹாடி, கெடா செல்வது உண்மைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் அசிசானை மாற்றுவதற்காகத்தான் அவர் அங்கு செல்கிறார் என்பதை துவான் இப்ராகிம் மறுத்தார்.

அச்செய்தி, கட்சியில் பிளவை உண்டுபண்ணும் நோக்கம் கொண்டதாக பாஸ் கருதுவதாக அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பொதுத்தேர்தல் நவம்பரில் நடக்கலாம் என்று கூறப்படுவதால் இப்படிப்பட்ட பல விவகாரங்களை எதிரிகள் கிளப்பி விடுவார்கள் என்றாவர்

“உறுப்பினர்கள் கூட்டம் கூட்டமாக விலகுவதாக இனி செய்தி வெளியிடுவார்கள். இதெல்லாம் தேர்தல் அருகில் வந்துவிட்டது என்பதற்கு அறிகுறிகளாகும்.”

பாஸ் உறுப்பினர்கள், எதிரிகளின் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று கேட்டுகொண்ட அவர்,  கட்சியின் அதிகாரப்பூர்வமான மூலங்களிலிருந்துதான் அவர்கள் தகவல்களைப் பெற வேண்டும்  என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, பெர்னாமா அசிசானைச் சந்தித்தபோது அவர், நலமாக இருப்பதாகவும் தம் பணிகளைச் செய்யும் ஆற்றல் தமக்கு உண்டு என்றும் சொன்னார்.

பாஸ் மந்திரி புசாரை மாற்ற நினைத்திருந்தால் தாம் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றபோதே அதைச் செய்திருக்கும், இப்போது தாம் குணமடைந்த நிலையில் அதைச் செய்யாது என்றும் அசிசான் தெரிவித்தார்.

என்றாலும், கட்சி எந்த முடிவைச் செய்தாலும் அதை அவர் பின்பற்றுவார்.

“மந்திரி புசாராக வேண்டும் என்று நான் கேட்கவில்லை…கட்சிதான் கேட்டுக்கொண்டது….இப்போது விலகச் சொன்னால் நாளையே விலகிக்கொள்வேன்”, என்றாரவர்.

TAGS: